உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை பேரணியில் ஈடுபட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கைக் காப்பதில் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சனிக்கிழமை ஹாத்ரஸ் வன்கொடுமையைக் கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேரணியில் ஈடுபட்டார். பிர்லா கோளரங்கத்தில் இருந்து காந்தி சிலை வரை நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.