இந்தியா

உ.பி.யில் காங்கிரஸார் தடுத்து நிறுத்தம்: ராகுல் உடன் 5 பேர் செல்ல அனுமதி

3rd Oct 2020 04:48 PM

ADVERTISEMENT

ஹாத்ரஸ் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

ராகுல்காந்தியுடன் 5 பேர் செல்வதற்கு அம்மாநில முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று முன் தினம் உத்தரப்பிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் இன்று (சனிக்கிழமை) மீண்டும் உத்தரப்பிரதேசத்திற்கு விரைந்தனர்.

அவர்களது வருகையையொட்டி தில்லி - உத்தரப்பிரதேச எல்லையான நொய்டாவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

உத்தரப்பிரதேசம் வந்த ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களை காவல்துறையினர் எல்லையில் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினரிடையே மீண்டும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ராகுல்காந்தி ஹாத்ரஸ் பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க ராகுல்காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் அவ்னிஷ் அவஸ்தி உத்தரவு பிறப்பித்து அனுமதி வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT