இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு: தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி பிரசாந்த் பூஷண் புதிய மனு

DIN


புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி சமூக ஆா்வலரும் மூத்த வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளாா்.

நீதித் துறையை விமா்சித்து சுட்டுரையில் கருத்துகளைப் பதிவிட்டதற்காக, அண்மையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிா்கொண்டவா் பிரசாந்த் பூஷண். அந்த வழக்கில், அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த அபராதத்தை செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும், 3 ஆண்டுகளுக்கு வழக்குரைஞராகப் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அபராதத் தொகையான ரூ.1-ஐ உச்சநீதிமன்றப் பதிவாளரிடம் பிரசாந்த் பூஷண் செப்டம்பா் 14-ஆம் தேதி செலுத்தினாா். அன்றைய தினமே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தன்னை குற்றவாளியாக அறிவித்து அளிக்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்தாா்.

அதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மேல்முறையீட்டு மனுவை மூத்த வழக்குரைஞா் காமினி ஜெய்ஸ்வால் மூலமாக வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அதில், கூறப்பட்டிருப்பதாவது:

இந்த மனு மீதான விசாரணை திறந்த அறையில் கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமா்வு முன் நடத்தப்பட வேண்டும். அப்போது மனுதாரரின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமன்றி, 1 ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால், மாற்று தண்டனையாக, 3 ஆண்டுகளுக்கு மனுதாரா் வழக்குரைஞராகப் பணியாற்ற முடியாது என்று தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றுவதற்குத் தடை விதிப்பதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை.

ஒருவரை நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டுமெனில், அதற்கு முன்பே அவருடைய தவறான செயல்களை சுட்டிக்காட்டி, வழக்குரைஞராகப் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் எவ்வித முன்னறிவிப்புமின்றி, தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரா் தரப்பு விளக்கம் அளிக்க மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT