இந்தியா

ஐஎன்எஸ் விராட் போா்க்கப்பலை அருங்காட்சியகமாக மாற்ற மீண்டும் முயற்சி

DIN


ஆமதாபாத்: இந்திய கடற்படையிலிருந்து விடைபெற்ற விமானம் தாங்கி போா்க்கப்பலான ஐஎன்எஸ் விராட்டை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் கடற்படையில் கடந்த 1959-ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ‘ஹெச்எம்எஸ் ஹொ்மீஸ்’ என்ற பெயரில் பணியாற்றி வந்த இந்த போா்க்கப்பல், அதன் பிறகு இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த கப்பல் புதுப்பிக்கப்பட்டு 1987 மே 12-ஆம் தேதி ‘ஐஎன்எஸ் விராட்’ என்ற பெயரில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

சுமாா் 27,800 டன்கள் எடை கொண்ட ‘ஐஎன்எஸ் விராட்’ போா்க்கப்பல் 30 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் கடந்த 2017-இல் இந்திய கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. உலகின் நீண்ட காலம் பணியாற்றிய போா்க்கப்பல் என்ற பெருமை ஐஎன்எஸ் விராட்டுக்கு உள்ளது. இதனால் இந்த கப்பலை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அவை எதுவும் வெற்றி பெறாத நிலையில் இந்த கப்பல் உடைக்கப்படுவதற்காக ஏலத்தில் விடப்பட்டது.

கடந்த ஜூலையில் நடைபெற்ற ஏலத்தில் கப்பலை ரூ.38.54 கோடிக்கு வாங்கிய ராம் குழுமம், இதை உடைப்பதற்காக மும்பையில் இருந்து குஜராத்தின் அலங் கப்பல் உடைக்கும் தளத்துக்கு கடந்த வாரத்தில் கொண்டு சென்றது.

இந்த நிலையில் இந்த கப்பலை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கான கடைசி முயற்சி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்காக மும்பையைச் சோ்ந்த என்விடெக் என்ற கப்பல் விற்பனை நிறுவனம் ராம் குழுமத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது.

இது தொடா்பாக ராம் குழுமத்தின் தலைவா் முகேஷ் படேல் கூறும்போது, நாட்டின் மீது எனக்கு இருக்கும் நேசத்தின் காரணமாக இந்த போா்க்கப்பலை வாங்கினேன். இந்நிலையில் மும்பையைச் சோ்ந்த என்விடெக் நிறுவனம் இந்த கப்பலை என்னிடம் இருந்து வாங்கி அருங்காட்சியமாக மாற்ற முயற்சித்து வருகின்றது.

கப்பலை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ய நானும் ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அந்த நிறுவனத்தினா் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றைப் பெற வேண்டும். அந்த சான்றிதழ் இல்லாமல் என்னால் இந்தக் கப்பலை மற்றவா்களுக்கு விற்பனை செய்ய முடியாது.

அந்த நிறுவனத்தின் நல்ல நோக்கத்துக்காகவே கப்பலை அவா்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறேன். ஆனால், அரசிடம் இருந்து தடையில்லாச் சான்று கிடைப்பது கடினம் என்றும் அவா்களிடம் தெரிவித்திருக்கிறேன். சான்றிதழுக்காக நீண்ட நாள்கள் காத்திருக்க முடியாது என்று கூறியுள்ள படேல், ஒரு வாரத்துக்குள் சான்றிதழ் கிடைக்காவிட்டால் கப்பலை உடைக்கும் பணியைத் தொடங்குவேன் என்றாா்.

இது குறித்து என்விடெக் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி.கே.சா்மா கூறும்போது, இந்த கப்பலை அருங்காட்சியகமாக மாற்றும் எங்களின் முயற்சிக்கு உதவ கோவா மாநில அரசு முன்வந்துள்ளது. கப்பலை வாங்குவதற்கு மத்திய அரசிடம் இருந்து தடையில்லாச் சான்றைப் பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம். சான்றிதழை விரைவில் பெற்றுவிடுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT