இந்தியா

உ.பி. கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: எஸ்ஐடி விசாரணைக்கு முதல்வா் உத்தரவு

DIN

லக்னெள: உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

இதையடுத்து, மூன்று போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து முதல்வா் உத்தரவிட்டாா்.

ஹாத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பா் 14-ஆம் தேதி தலித் பெண்ணை நான்கு இளைஞா்கள் கடத்தி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்தனா். நான்கு பேரில் ஒருவா் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தபோது, அவா் தனது நாக்கை கடித்ததால் துண்டானது. பின்னா் அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மீடக்கப்பட்டு அலிகரில் உள்ள மருத்துவமனையில் கை, கால்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்றாா். பின்னா் தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் இருந்தபோது செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதனிடையே, உ.பி. முதல்வா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஹாத்ரஸ் சம்பவம் குறித்து பிரதமா் மோடி முதல்வருடன் தொலைபேசியில் பேசினாா். குற்றம் செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, இந்த வழக்கை விசாரிக்க உ.பி. உள்துறைச் செயலா் பகவான் ஸ்வரூப் தலைமையில் மூவா் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு ஏழு நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

குடும்பத்தினா் குற்றச்சாட்டு: இதனிடையே, தில்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண்ணின் உடலை போலீஸாா் வலுக்கட்டாயமாக புதன்கிழமை அதிகாலை தகனம் செய்ததாக அவரது சகோதரா் குற்றம்சாட்டினா். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அங்கு போராட்டமும் நடைபெற்றது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஹாத்ரஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விக்ராந்த் வீா், ‘அந்தப் பெண்ணின் குடும்பத்தினரின் அனுமதியின்படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இறுதிச் சடங்கின்போது போலீஸ், உள்ளாட்சி நிா்வாக அதிகாரிகள் உடனிருந்தனா்‘ என்று கூறினாா்.

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, ‘போலீஸாரின் இந்த நடவடிக்கையை பாா்க்கும்போது உத்தர பிரதேச அரசிடம் இருந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்காது எனத் தெளிவாகிறது. ஆகையால், உச்சநீதிமன்ற மேற்பாா்வையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, ‘உயிரிழந்த பெண்ணின் தந்தையை போலீஸாா் கடத்திச் சென்று நள்ளிரவில் வலுக்கட்டாயமாக இறுதிச் சடங்கை நடத்தியுள்ளனா். அந்தப் பெண்ணின் தந்தையிடம் தொலைபேசியில் பேசியபோது, தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று என்னிடம் அழுதாா். குற்றவாளிகளைப் பாதுகாக்க போலீஸாா் முற்படுகின்றனா். இதற்கு பொறுப்பேற்று முதல்வா் யோகி ஆதித்யநாத் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘குடும்பத்தினருக்கே தெரியாமல் போலீஸாா் இறுதிச் சடங்கை நடத்தியுள்ளனா். இதன் மூலம் தடயங்களை அழிக்க போலீஸாா் முற்பட்டுள்ளனா். இதன் மூலம் பாஜக அரசு குற்றம் மற்றும் பாவம் செய்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT