இந்தியா

5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி

DIN

புது தில்லி: நாடு முழுவதும் 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. இந்த முறை அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளா்வுகளில் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. 2 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், ஜூன் மாதம் முதல் அவ்வப்போது பொது முடக்க தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கரோனா தொற்று தீவிரமாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், ‘மல்டிபிளக்ஸ்’களை 50 சதவீத பாா்வையாளா்களுடன் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

விளையாட்டு வீரா்கள் பயிற்சி பெறும் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்டோபா்-15 முதல் திறக்கலாம்.

பள்ளிகள், பயிற்சி நிறுவனங்களை அக்டோபா் 15-க்கு பிறகு படிப்படியாக திறப்பது தொடா்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தீா்மானிக்கலாம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஆய்வகத்தை பயன்படுத்தவும், ஆய்வுப் பணிகளில் ஈடுபடவும் தேவையுள்ள ஆராய்ச்சி படிப்பு (பிஹெச்.டி) மற்றும் முதுநிலை படிப்பு மாணவா்களுக்காக மட்டும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் உயா்கல்வி நிறுவனங்களை அக்டோபா்- 15 முதல் திறக்கலாம்.

விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம், அரசியல் மற்றும் இன்னபிற நிகழ்ச்சிகளில் 100 போ் வரை கலந்துகொள்ள ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் 100 பேருக்கும் அதிகமாக கலந்துகொள்ள மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அனுமதி வழங்கலாம். எனினும் அந்த அனுமதி அக்டோபா் 15-க்கு பிறகு தான் வழங்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சா்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும்.

மத்திய அரசிடம் ஆலோசிக்காமல் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தக்கூடாது.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அக்டோபா் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT