இந்தியா

'அனைத்து ரயில் நிலையங்களிலும் மண் குவளையில் தேநீர் விற்பனை'

30th Nov 2020 08:20 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் குவளைகளுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மண் குவளையில் தேநீர் விற்பனை செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
 ராஜஸ்தான் மாநிலத்தில் மின்மயமாக்கப்பட்ட திகாவாரா-பண்டிகுயி பிரிவு ரயில் வழித்தட தொடக்க நிகழ்ச்சி திகாவாரா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 34 கி.மீ. தொலைவு கொண்ட இந்த மின் வழித்தடத்தில் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்து அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது: நாட்டில் சுமார் 400 ரயில் நிலையங்களில் தற்போது மண் குவளையில் தேநீர் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் தேநீரை மண் குவளையில் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறோம். பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை நோக்கிய ரயில்வே துறையின் பங்களிப்பாக இந்த நடவடிக்கை அமையும். மண் குவளை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
 மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும் முன்னர், ராஜஸ்தானில் ரயில்வே துறை புறக்கணிக்கப்பட்டது. தில்லி-மும்பை வழித்தடத்துக்குப் பின்னர் அடுத்த 30 ஆண்டுகளாக எந்த வழித்தடமும் மின்மயமாக்கப்படவில்லை. 2009-2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014-2020-இல் ராஜஸ்தானில் ரயில்வே மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு பலமடங்கு உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ரயில் வழித்தடங்களை மின்மயமாக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் ரயில்கள் இயங்கும் என்பதால் எரிபொருள், பணம், நேரம் ஆகியவை சேமிக்கப்படும். மேலும் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை நாட்டின் எந்தப் பகுதிக்கும் சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் குறைந்த நேரத்தில் கொண்டு செல்லவும் உதவும். சுற்றுச்சூழல் தொடர்பாக பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். ஆதலால், மின்மயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார் அவர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT