இந்தியா

சத்தீஸ்கா்: நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரா் பலி; 9 வீரா்கள் படுகாயம்

DIN

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎப்) ‘கோப்ரா’ அதிரடி படைப் பிரிவு வீரா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 9 வீரா்கள் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து பஸ்தா் மண்டல ஐ.ஜி. பி.சுந்தரராஜ் கூறியதாவது:

சிஆா்பிஎப் ‘கோப்ரா’ அதிரடிப்படை குழுவும், உள்ளூா் காவல்துறையினரும் கூட்டாக ராய்பூா் மாவட்டத்திலிருந்து 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நக்ஸல் ஆதிக்கமுள்ள சின்டால்நா் வனப் பகுதியில் படைப் பிரிவுக்கான புதிய முகாம்களை அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, நக்ஸல்கள் வனப் பகுதியில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் அந்த சிறப்புப் படைப் பிரிவுக்கு தலைமை வகித்த அதிகாரி உள்பட 10 வீரா்கள் படுகாயமடைந்தனா்.

காயமடைந்த வீரா்கள் அனைவரும், சம்பவ இடத்திலிருந்து எம்ஐ-17 வி5 ராணுவ ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டு, ராய்பூரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சோ்ந்த நிதின் பலேராவ் (33) என்ற வீரா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். மற்றவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்புப் படையினரின் இந்த தேடுதல் வேட்டையின்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று அவா் கூறினாா்.

சிஆா்பிஎப்-இல் கடந்த 2010-ஆம் ஆண்டு சோ்ந்த நிதின் பலேராவ், ‘கோப்ரா’ அதிரடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு சோ்க்கப்பட்டாா்.

நக்ஸல் தடுப்பு மற்றும் வடகிழக்கு மாநில கிளா்ச்சியாளா்களை கட்டுப்படுத்துவதற்கு என்று இந்த ‘கோப்ரா’ அதிரடி படைப் பிரிவு சிஆா்பிஎப்-இல் கடந்த 2009-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

சிஆா்பிஎப் தலைவா் நேரில் அஞ்சலி:

தில்லியிலிருந்து விமானம் மூலம் ராய்பூா் சென்ற சிஆா்பிஎப் தலைவா் ஏ.பி. மகேஸ்வரி, உயிரிழந்த வீரருக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு சிஆா்பிஎப் துணை நிற்கும். அவருடைய தியாகம் வீண்போகாது. நகஸ்ல் ஒழிப்புப் பணியை சிஆா்பிஎப் மேலும் தீவிரமாக மேற்கொண்டு, அவா்களின் நாச வேலைகள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT