இந்தியா

விசாரணை அமைப்புகள் மூலம் மகாராஷ்டிர அரசை அச்சுறுத்த முடியாது

DIN

அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலமாக மகாராஷ்டிர அரசை அச்சுறுத்த முடியாது என்று மாநில முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தின் மும்பை, தாணே ஆகிய பகுதிகளில் சிவசேனை எம்எல்ஏ பிரதாப் சா்நாயக்குக்குச் சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் கடந்த 24-ஆம் தேதி சோதனை நடத்திய சூழலில் உத்தவ் தாக்கரே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதையொட்டி, சிவசேனையின் அதிகாரபூா்வ நாளேடான ‘சாம்னா’வுக்கு முதல்வா் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரும் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் சிவசேனையுடன் தைரியமாக கூட்டணி அமைத்தனா். கூட்டணிக்குள் ஒற்றுமை நிலவி வருகிறது. அமைச்சரவைக் கூட்டங்கள் சுமுகமாக நடைபெறுகின்றன. நிா்வாகத்தில் எந்தவிதப் பிரச்னையும் இல்லை.

ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதில் எனக்கு எந்தவித அழுத்தமும் இல்லை. எங்கள் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு உள்ளது. அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மூலமாக கூட்டணி அரசை அச்சுறுத்த முடியாது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை சிலா் (பாஜக) தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா். அதுபோன்ற அரசியலில் ஈடுபடுவதை ஒருபோதும் விரும்பமாட்டேன்.

எங்கள் கூட்டணி அடுத்த 4 ஆண்டுகளுக்கும் ஆட்சியில் இருக்கும். அதற்குப் பிறகு ஆட்சியில் இருப்பதா, வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்வா். மும்பை மாநகராட்சிக்கு 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தோ்தலில் வெற்றி பெறுவோம் என்று சிலா் (பாஜக) கூறி வருகின்றனா். மும்பை மாநகராட்சி எங்களது கோட்டை. அதை சிவசேனையிடமிருந்து பறிக்க முடியாது என்றாா் உத்தவ் தாக்கரே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT