இந்தியா

கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு: 3 மையங்களில் ஆய்வு செய்த பிரதமர்

28th Nov 2020 09:51 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 3 நகரங்களுக்கு, பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்ப பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக், புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு அவர் சென்றார்.
இந்தியாவின் உள்நாட்டு தடுப்பு மருந்து தயாரிப்பு துரித கதியில் வளர்ந்து வருவது பெருமையளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். தடுப்பு மருந்து உற்பத்தியின் மொத்த பயணத்தில் அறிவியலின் வலுவான கோட்பாடுகளை இந்தியா எவ்வாறு பின்பற்றியது என்பது குறித்து பிரதமர் பேசினார். தடுப்பு மருந்து விநியோகத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகளையும் அவர் வரவேற்றார்.
தடுப்பு மருந்து உடல் நலத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் நன்மை பயக்க வேண்டுமென்று இந்தியா விரும்புவதாக பிரதமர் கூறினார். வைரசுக்கு எதிரான ஒருங்கிணைந்த போரில், நமது அண்டை நாடுகள் உட்பட இதர நாடுகளுக்கு உதவுவது இந்தியாவின் கடமையென்றும் அவர் கூறினார்.
ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம் என்பது குறித்த தங்களது கருத்துகளை விஞ்ஞானிகள் வெளிப்படையாக தெரிவிக்கலாம் என்று பிரதமர் கூறினார். கரோனாவை எதிர்த்து போராட பல்வேறு புதிய மற்றும் மறுபயன்பாட்டு மருந்துகளை எவ்வாறு அவர்கள் தயாரித்து வருகின்றனர் என்பது குறித்து விஞ்ஞானிகள் அப்போது விளக்கினர்.
தடுப்பு மருந்து தயாரிப்பு பயணத்தின் முக்கியமான கட்டத்தில் தங்களுக்கு உற்சாகம் அளிக்கவும், தங்களின் முயற்சிகளை வேகப்படுத்தவும் பிரதமர் நேரில் வந்து சந்தித்ததற்கு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT