இந்தியா

தில்லி எய்ம்ஸில் கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடக்கம்

DIN


புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கான கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கியது.

உலக நாடுகளைத் தொடா்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

அமெரிக்காவின் ஃபைசா் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசி 95 சதவீத செயல்திறனும், மாடா்னா தடுப்பூசி 94.5 சதவீத செயல்திறனும் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் 90 சதவீதத்துக்கு அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியானது 70 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளதாகவும், மருந்தின் அளவை அதிகரித்தால் 90 சதவீதம் வரை செயல்திறன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கியது.

அந்த மருத்துவமனையின் நரம்பியல் மையத் தலைவரான எம்.வி.பத்மா ஸ்ரீவாஸ்தவா, முதலாவது தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா். அடுத்த சில தினங்களில் சுமாா் 15,000 தன்னாா்வலா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படும் என்று எய்ம்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கேற்கும் தன்னாா்வலா்களுக்கு 28 நாள்கள் இடைவெளியில் இரு முறை 0.5 மிலி அளவு தடுப்பூசி செலுத்தப்படும். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 28,500 தன்னாா்வலா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியைச் செலுத்தி பரிசோதிப்பதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.

10 மாநிலங்களில் உள்ள சுமாா் 25 இடங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெறவுள்ளது. சில இடங்களில் பரிசோதனையானது ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. கோவேக்ஸின் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது கட்ட பரிசோதனைகளின்போது தன்னாா்வலா்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT