இந்தியா

சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்

DIN

‘இந்தியா டுடே’ நிறுவனத்தால் ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

ஆங்கில ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் இந்திய அளவில் பெரிய மாநிலங்களின் பல்வேறு வகைப்பாடுகளை ஆய்வு செய்து அதில் சிறந்து விளங்கும் மாநிலத்தைத் தேர்வு செய்து “மாநிலங்களின் சிறந்த மாநிலம்” எனும் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. அவ்வகையில் 2020ஆம் ஆண்டிற்கான “மாநிலங்களின் சிறந்த மாநிலம்” எனும் விருதினை தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்படுகிறது. 2000 புள்ளிகளில் 1263.1 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

மேலும் இந்த விருதை, தமிழ்நாடு அரசு 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பெற்று சிறப்பு சேர்த்துள்ளது. 

இந்த விருதானது, கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல், வணிகச் சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து வழங்கப்படுகிறது.

மாநிலத்தின் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, ஆளுமைத் திறன், தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகிய வகைப்பாடுகளின் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்படுகிறது.

மேற்கண்ட வகைப்பாடுகளின் அடிப்படையில், பெரிய மாநிலங்களுக்கிடையே சிறந்த மாநிலத்தை தேர்வு செய்வதால் தேர்வு செய்யப்படும் மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளைப்போலவே, இந்த ஆண்டும் இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காகவும், உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே மக்கள் தொகையில் 6ஆம் இடத்திலும், நாட்டின் பெரிய மாநிலங்களில் 12ஆம் இடத்திலும் இருந்தும்கூட, இந்தியப் பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், அதிக நகர்ப்புறங்களைக் கொண்ட மாநிலமாகவும், அதே நேரம் தொழில் துறையிலும் வலுவான உற்பத்தி அடித்தளத்தினையும், அதிக சேவைத் துறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அரசியல் தாக்கங்களுக்கிடையில், தமிழ்நாடு அரசு தொழில்துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே, அதிக அளவில் பலதரப்பட்ட முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு உதவிகரமாக இருந்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகம் போன்ற முகமைகள் அமைக்கப்பட்டதன் மூலம் மாநிலத்தில் பொருளாதார தொலைநோக்குப் பார்வையை அடைய உதவியுள்ளது. மாநிலத்தில் தொழிற் முயற்சிக்கான முன்னேற்றம் காண மாநில அரசின் ஒருங்கிணைந்த முதலீட்டு முகமை, தொழிற் வளர்ச்சிக்கான, கட்டமைப்புக்கான அனுமதி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியைப் பெறுதல் போன்றவற்றிற்கான அறிவுரைகளை வழங்கி வருகின்றன.

தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை-2023, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீரிய முயற்சிகள் மற்றும் 13 பிரிவுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளையும் ஊக்குவிக்க காரணமாக அமைந்துள்ளது.  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முன்னெடுத்து தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

2019-2020-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாடு, தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு உயர்ந்து 8.03 சதவீதத்துடன், நாட்டிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்து, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது. 

நலத்திட்டங்களில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, சமூக நீதி, பின்தங்கிய மக்களை உயர்த்துதல் போன்றவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, பொதுக்கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டு, உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு, படித்தவர்கள் மற்றும் தொழில் நுட்பரீதியாக திறமையான தொழிலாளர்களை கொண்டுள்ள மாநிலமாக உள்ளது.

மனித வள மேம்பாட்டுக் குறியீட்டிலும் தமிழ்நாடு நன்றாக செயல்பட்டிருக்கிறது. ஒருவயதிற்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சதவீதம் தேசிய சராசரியைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது. முதலிடம் பெற்றதற்கான விருதினை வருகின்ற டிசம்பர் மாதம் 5ம் தேதி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட உள்ளதாக இந்தியா டுடே நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT