இந்தியா

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில்  பஹ்ரைன் வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது: அமைச்சர் ஜெய்சங்கர்

DIN

மனாமா: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பஹ்ரைன் வாழ் இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது என, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாராட்டுத் தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு 6 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, அவர் பஹ்ரைன் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 24) சென்றார். 
அவர் அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் புதன்கிழமை காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பஹ்ரைன் வாழ் இந்தியர்களின் பங்களிப்புக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். தொடர்ந்து, அவர் சுட்டுரையில், "பஹ்ரைன்வாழ் இந்தியர்களுடன் தொடர்புகொள்வதில் மகிழ்ச்சி. இந்தியக் கொடியை  உயரமாக பறக்கவைத்ததற்கு நன்றி. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புக்கு பாராட்டுகள்' எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, அந்நாட்டுத் தலைநகர் மனாமாவில் உள்ள பல நூற்றாண்டுகள் பழைமையான ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு அவர் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தார். பின்னர் அவர் சுட்டுரையில், "மனாமாவில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீநாத்ஜி கோயிலில் தரிசனத்துடன் இந்த நாள் தொடங்கியது. பஹ்ரைனுடனான எங்களது நெருக்கமான பிணைப்புகளுக்கு இது ஒரு சான்று' எனத் தெரிவித்திருந்தார்.
ரூ. 31.05 கோடி மதிப்பில் இக்கோயிலின் மறுசீரமைப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தொடக்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, அவர் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல்லத்தீப்-பின்-ரஷீத்-அல்- சயானியுடன் இருதரப்பு, பிராந்திய, சர்வதேச பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கரோனா நோய்த் தொற்று காலத்தின்போது வளைகுடா வாழ் இந்தியர்கள் மீது பஹ்ரைன் "சிறப்புக் கவனம்' செலுத்தியதற்காக நன்றி தெரிவித்தார்.
மேலும், கடந்த 11ஆம் தேதி  மறைந்த அந்நாட்டு பிரதமர் இளவரசர் காலிஃபா-பின்-சல்மான்-அல்-காலிஃபாவுக்கு இந்தியா சார்பில் இரங்கல் தெரிவித்தார்.
பஹ்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வலைதள அறிக்கைப்படி,  அங்கு இந்திய வம்சாவளியினர் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். இது, பஹ்ரைனின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT