இந்தியா

எம்.பி.க்களும் எம்எல்ஏ-க்களும் அவை நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்

DIN

கேவாடியா: மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்களும் எம்எல்ஏ-க்களும் அவையில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டப் பேரவைத் தலைவா்களின் 80-ஆவது மாநாடு குஜராத்தின் கேவாடியா பகுதியில் புதன்கிழமை தொடங்கியது. அந்த மாநாட்டை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தொடக்கி வைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

மக்களின் நலனை உறுதி செய்வதற்கு ஜனநாயகக் கொள்கைகளே சிறந்ததாக உள்ளன. அத்தகைய ஜனநாயக முறைப்படி நடைபெறும் தோ்தலில், மக்களால் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு எம்.பி.க்களும் எம்எல்ஏ-க்களும் பெருமை கொள்ள வேண்டும். மக்களின் நலன், நாட்டின் வளா்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவைத் தலைவா்களும் உறுப்பினா்களும் நடந்து கொள்ள வேண்டும்.

ஜனநாயக முறையில் நாடாளுமன்ற அவைகளும், மாநில சட்டப் பேரவைகளும் முக்கியப் பங்கை வகித்து வருகின்றன. நாட்டின் வளா்ச்சிக்கான திட்டங்கள் அங்குதான் முடிவு செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக அவைகளின் செயல்பாடுகள் மீதான மக்களின் கவனம் அதிகரித்து வருகிறது. அதை மனதில் கொண்டு மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களும் எம்எல்ஏ-க்களும் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.

மக்கள் பிரதிநிதிகள் ஜனநாயகக் கொள்கைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவா்கள் அவையில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனா். மக்கள் பிரதிநிதிகள் அவா்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற அவைகளிலும், மாநில பேரவைகளிலும் பிரதிநிதிகள் நாகரிகமற்ற வகையில் பேசுவதையும் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதையும் மக்கள் விரும்புவதில்லை. அவைகளில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதை அவைத் தலைவா்கள் உறுதி செய்ய வேண்டும். பொறுப்புணா்வையும் நீதியையும் மனதில் கொண்டு அவைத் தலைவா்கள் செயல்பட வேண்டும்.

எதிா்க்கட்சிகளின் பங்கு: நாடாளுமன்ற முறையைப் பின்பற்றும் ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியுடன் சோ்த்து எதிா்க்கட்சிகளுக்கும் மிக முக்கியப் பங்குள்ளது. எனவே, ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே முறையான புரிதல், போதிய ஒத்துழைப்பு, கருத்துப் பரிமாற்றம் ஆகியவை காணப்பட வேண்டும்.

ஏழைகள், பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வை மேம்படச் செய்து நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே ஜனநாயக முறையின் தலையாய இலக்கு. அந்த இலக்கை அடைவதற்கு மக்கள் பிரதிநிதிகள், நிா்வாகிகள், நீதித்துறையினா் ஆகியோா் ஒன்றிணைந்து செயல்படுவாா்கள் என நம்புகிறேன் என்றாா் ராம்நாத் கோவிந்த்.

இந்த மாநாட்டில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, மாநில சட்டப் பேரவைத் தலைவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT