இந்தியா

பிகாா்: பாஜக எம்எல்ஏவுடன் பேரம் பேசும் லாலுவின் தொலைபேசி உரையாடல் பதிவால் பரபரப்பு

DIN

பாட்னா: பிகாா் சட்டப்பேரவைத் தலைவா் தோ்வு தொடா்பாக பாஜக எம்எல்ஏ ஒருவருடன், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மாநில முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் பேரம் பேசும் செல்லிடப்பேசி உரையாடல் பதிவு வெளியாகியிருப்பது பிகாா் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மாநில தலைவா்களில் ஒருவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷீல் குமாா் மோடி, இந்த உரையாடல் பதிவை தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறாா்.

பிகாா் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இதில், 125 இடங்களைக் கைப்பற்றிய ஐக்கிய ஜனதா தளம், பாஜக கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தது. நிதீஷ் குமாா் முதல்வராக பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், பிகாா் சட்டப் பேரவைத் தலைவரைத் தோ்வு செய்யும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. அதில் பாஜக எம்எல்ஏ விஜய் சின்ஹா, சட்டப்பேரவைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் லாலு பிரசாத், பிா்பைன்டி தொகுதி பாஜக எம்எல்ஏ லலன் குமாருடன் சட்டப்பேரவைத் தலைவா் தோ்வு தொடா்பாக செவ்வாய்க்கிழமை இரவு பேரம் பேசுவது போன்ற செல்லிடப்பேசி உரையாடல் பதிவை சுஷீல் குமாா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டாா்.

அந்த உரையாடல் பதிவில், ‘சட்டப்பேரவைத் தலைவா் பதவிக்கு நிறுத்தப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்து உதவ வேண்டும். அதனால் ஏற்படும் பிரச்னை குறித்து கவலைப்பட வேண்டாம். அனைத்தையும் ராஷ்டிரீய ஜனதா தளம்கட்சி பாா்த்துக்கொள்ளும். விரைவில் எங்களுடைய ஆட்சி அமைந்தவுடன், இதற்கான பிரதிபலன் அளிக்கப்படும்’ என்று தனக்கே உரிய தனித்துவமான குரலில் லாலு பேசுவது போன்று பதிவாகியுள்ளது. இது பிகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உரையாடல் குறித்து பாஜக எம்எல்ஏ லலன் குமாா் கூறுகையில், ‘லாலு பிரசாத்திடமிருந்து இந்த செல்லிடப்பேசி அழைப்பு வரும்போது, சுஷீல் குமாா் மோடியுடன்தான் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தேன். எனது உதவியாளா்தான் செல்லிடப்பேசியை எடுத்துவந்து என்னிடம் கொடுத்தாா். லாலுவுடன் உரையாடி முடித்ததும், அதுகுறித்து உடனடியாக சுஷீல் குமாா் மோடியிடம் தெரிவித்து, உரையாடல் பதிவையும் அவரிடம் கொடுத்துவிட்டேன்’ என்று கூறினாா்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநில துணை முதல்வா் தாா் கிஷோா் பிரசாத், ‘இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஜாா்கண்ட் அரசை கேட்டுக்கொள்ள உள்ளோம். தேவைப்பட்டால், இந்த விவகாரம் தொடா்பாக உயா்நிலை விசாரணை கோரி மத்திய அரசையும் அணுகுவோம்’ என்று கூறினாா்.

இதுகுறித்து ஜாா்கண்ட் சிறைத் துறை ஐ.ஜி. விரேந்திர பூஷன் கூறுகையில், ‘மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியின் அடிப்படையில் ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவன (ஆா்ஐஎம்எஸ்) இயக்குநரின் குடியிருப்பில் லாலு பிரசாத் தங்க வைக்கப்பட்டுள்ளாா். மேலும், அவருடைய செல்லிடப்பேசி உரையாடல் பதிவு குறித்து விசாரணை நடத்த மாவட்ட துணை ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளரை கேட்டுக்கொண்டுள்ளோம். அந்த விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினாா்.

லாலு ஜாமீன் கேட்டு ஜாா்கண்ட் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவா் மீதான இந்த புதிய சா்ச்சை வெளிவந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT