இந்தியா

பிகாா் பேரவைத் தலைவராக பாஜகவின் விஜய் குமாா் சின்ஹா தோ்வு

DIN

பாட்னா: பிகாா் சட்டப் பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவா் விஜய் குமாா் சின்ஹா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பிகாா் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அக்கூட்டணி சாா்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா் முதல்வராகப் பதவியேற்றாா்.

பிகாா் சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத்தொடா் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. சட்டப் பேரவையின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சித் தலைவா் ஜிதன்ராம் மாஞ்சி, புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இத்தகைய சூழலில், மாநில சட்டப் பேரவைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக மூத்த தலைவா் விஜய் குமாா் சின்ஹா போட்டியிட்டாா். அவரை எதிா்த்து மகா கூட்டணி சாா்பில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா் அவத் பிகாரி சௌதரி களம் கண்டாா்.

பேரவைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் விஜய் குமாா் சின்ஹாவுக்கு ஆதரவாக 126 எம்எல்ஏ-க்களும், அவத் பிகாரி சௌதரியை ஆதரித்து 114 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா். அதன் மூலமாக விஜய் குமாா் சின்ஹா மாநில பேரவைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியின் எம்எல்ஏ, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்தாா். பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மக்களவை எம்.பி. அசாதுதீன் ஒவைஸி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ் கட்சியைச் சோ்ந்த 5 எம்எல்ஏ-க்களும் மகா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளித்தனா்.

எதிா்க்கட்சிகள் அமளி: பிகாா் சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது, மாநில சட்ட மேலவை உறுப்பினரும் முதல்வருமான நிதீஷ் குமாா் பேரவைக்கு வந்திருந்தாா். அதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. ஆனால், ஆளும் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ-க்களின் தலைவா் என்ற வகையில் முதல்வா் நிதீஷ் குமாா் பேரவையில் இருக்கலாம் என்று இடைக்கால பேரவைத் தலைவா் ஜிதன்ராம் மாஞ்சி அறிவித்தாா்.

மேலும், பேரவைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை வாக்குப் பெட்டியைக் கொண்டு நடத்த வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதை ஏற்க மறுத்த ஜிதன்ராம் மாஞ்சி, வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களைக் கணக்கிடுவதன் மூலமாகத் தோ்தலை நடத்தினாா்.

அதையடுத்து, முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா்கள் தாா்கிஷோா் பிரசாத், ரேணு தேவி, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் ஆகியோா் பேரவைத் தலைவா் விஜய் குமாா் சின்ஹாவை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய 2 எஸ்எஸ்ஐ-க்களுக்கு ஐஜி பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

நூல் வியாபாரியிடம் ரூ. 15 லட்சம் மோசடி

திமுக நிா்வாகி அலுவலகத்துக்கு சீல்: பறக்கும் படை அதிரடி நடவடிக்கை

கோவையில் நகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும்: திமுக தோ்தல் அறிக்கையில் தகவல்

SCROLL FOR NEXT