இந்தியா

அமராவதி நில மோசடி வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

DIN


புது தில்லி: அமராவதி நில மோசடி தொடர்பான வழக்கு விவரங்களை ஊடகங்கள் வெளியிடுவதற்கு ஆந்திர உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முந்தைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, அமராவதியில் தலைநகர் கட்டமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தியது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, இந்தத் திட்டத்தில் பெரிய அளவிலான நில அபகரிப்பு, முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டியது.

அமைச்சரவை துணைக் குழு அறிக்கையின் அடிப்படையில், நில முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக டிஐஜி தலைமையிலான 10 பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு நியமித்தது. இதையடுத்து ஆந்திர முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர் தம்மலப்பட்டி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் மீது நில மோசடி, ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

 ஆனால், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரங்களை ஊடகங்களில் செய்தியாக வெளியிடக் கூடாது என்று கூறி உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீநிவாஸ் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, வழக்கு விவரங்களை வெளியிடுவதற்கு ஊடகங்களுக்குத் தடை விதித்து மாநில உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிலையில், ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர். மேலும், அமராவதி சட்ட விரோத நிலப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் ஜனவரி கடைசி வாரம் வரையிலும் உயர் நீதிமன்றம் எந்த முடிவையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மாநில அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், அமராவதி சட்ட விரோத நிலப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கூறுவதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. ஜூன், ஜூலை மாதங்களில் நிலம் வாங்கிய விவசாயிகள் பின்னர் அதை ஜனவரி மாதத்தில் விற்றுள்ளனர். இதுபோன்ற தொடர் நிலப் பரிவர்த்தனைகளின் பின்னணியை மாநில அரசு விசாரிக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, மாநில அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களைப் பரிசீலிப்பதாகக் கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக நோட்டீஸ் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக,  ஸ்ரீநிவாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தஹி, ஹரீஷ் சால்வே ஆகியோர், முந்தைய அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக ஸ்ரீநிவாஸ் குறிவைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர். மேலும், மாநில தலைநகரத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படும் என்பதை சிலர் முன்கூட்டியே அறிந்திருந்தனர் என்று கூறுவது அபத்தமானது என்று கூறிய அவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்படுவதாகவும், நீதிமன்றத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கையே இல்லை என்றும் வாதிட்டனர்.

இதற்கு பதிலளித்த தவான், மாநில அரசு எந்த நீதிமன்றத்துக்கும் எதிரானது அல்ல. ஒரு குற்றவியல் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT