இந்தியா

26/11 நினைவுநாள்: கசாப்பின் தண்டனையை உறுதி செய்த துணிச்சலான சிறுமி

DIN


மும்பை:  பயங்கர ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், மும்பை நகருக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதன் 12-ஆம் நினைவு நாள் இன்று.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மும்பை காவல்துறையினா் ஏற்பாடு செய்துள்ளனா்.

மும்பைக்குள் கடல் வழியாக நுழைந்த 10 பயங்கரவாதிகள் சுமார் ஆறு மணி நேரம் கண்ணில் படுவோர் மீதெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி கோரத் தாண்டவம் ஆடியதன் 12-ஆம் நினைவு நாளில், உயிரோடு பிடிபட்ட ஒரேயொரு பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை வழங்க முக்கிய சாட்சியமாக அமைந்த மும்பைச் சிறுமி தேவிகாவின் துணிச்சலும் நினைவில் கொள்ளப்படுவது வழக்கம்.

இதையும் படிக்கலாமே.. புயலாக வலுவிழந்தது நிவர் புயல்

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பொதுமக்களை நோக்கி சரமாரியாகச் சுட்ட இரு நபர்களில் அஜ்மல் கசாபும் ஒருவர் என்று தீவிரவாதிகள் சுட்டதில் கால் ஊனமடைந்த தேவிகா ரொடாவன் (10) என்ற சிறுமி, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியம்தான் அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர காவல்துறையினருக்கு பேருதவியாக இருந்தது.

 மும்பை தாக்குதல் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த சிறப்பு நீதிமன்றத்துக்கு சாட்சியம் அளிக்க வந்த தேவிகாவிடம், "ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டவரை உன்னால் அடையாளம் காட்ட முடியுமா?' என்று நீதிபதி கேட்டார்.

 அதற்கு தன்னால் முடியும் என்று கூறிய தேவிகா, தன் முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பேரில் அஜ்மல் கசாபை சுட்டிக்காட்டி, "இவர்தான் துப்பாக்கியால் சுட்டார்' என்றார்.

 தேவிகா மேலும் நீதிமன்றத்தில் கூறியது: சத்ரபதி சிவாஜி நீதிமன்றத்தில் நான், எனது தந்தை மற்றும் சகோதரர் நின்று கொண்டிருந்தோம். அப்போது இரு நபர்கள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். துப்பாக்கியால் சுடுவதைப் பார்த்ததும் எனது சகோதரர் மிரண்டு போய் ஒரு பக்கம் அலறியடித்துக் கொண்டு ஓடினார். எனது தந்தையோ என்னை அழைத்துக் கொண்டு மற்றொரு பக்கம் ஓடினார். அப்போது தீவிரவாதி ஒருவர் என்னை நோக்கிச் சுட்டார். இதில் துப்பாக்கிக் குண்டு என் காலை துளைத்தது. இதனால் காலில் ரத்தம் பீறிட்டது என்று அந்த ரத்தம் உறையும் இரவு நேர அனுபவத்தை நினைவு கூர்ந்தார் சிறுமி தேவிகா.

நீதிமன்றத்துக்கு சாட்சியம் சொல்ல வந்த தேவிகா, ஊன்றுகோலின் உதவியுடன் மெதுவாக காலைத் தாங்கித் தாங்கி நடந்து வந்தார். இச்சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் பலரும் உணர்ச்சிவயப்பட்டு காணப்பட்டனர். இவரது சாட்சியம், மும்பை தாக்குதல் வழக்கில் முக்கியத்துவம் பெற்றது.

இறுதியாக அஜ்மல் கசாப் 2012 நவம்பர் 21-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி தண்டிக்கப்பட்டார். ஆனால், தேவிகா தனது விளையாட்டுப் பருவத்தை இழந்து, பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து அடுத்த மாதம் 22 வயதை பூர்த்தி செய்யவிருக்கும் பெண்ணாக உள்ளார். ஆனால் அவரது போராட்டங்கள் இன்றுவரை முடியவில்லை.

பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் எப்படியோ முயன்று படித்த தேவிகாவுக்கு, அரசு வழங்குவதாக உறுதிமொழி அளித்த வீடு இன்னமும் வழங்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் தனது துணிச்சல் நினைவுக்கூரப்பட்டாலும், தங்களது நிலை எந்த அரசுக்கும் நினைவூட்டப்படவில்லை என்கிறார்கள் அவர்களது குடும்பத்தினர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கடிதங்கள எழுதியும் உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆண்டும் வழக்கம் போல அவர்கள் தங்களது கோரிக்கையை முன் வைத்துள்ளனர். எப்போதும் போல வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளிக்காமல், அவர்களுக்கு ஒரு வீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் மனம் வைக்கும் என்று நம்புவோமாக.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT