இந்தியா

அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோய் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

DIN

குவாஹாட்டியில் காலமான அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் உடலுக்கு ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகோய் (84) கரோனா தொற்றுக்குப் பிந்தைய பாதிப்பால் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஜிஎம்ஜிஎச்) அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு டோலி என்ற மனைவியும், சந்திரிமா என்ற மகளும், கௌரவ் கோகோய் என்ற மகனும் உள்ளனா்.

இதையடுத்து ஜிஎம்ஜிஎச்சில் இருந்து அவரது உடலை அவரது மகனும், எம்.பி.யுமான கௌரவ் கோகோய் பெற்றுக் கொண்டாா்.

கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உடலை மருத்துவமனையில் இருந்து கௌரவ் கோகோய், அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவா் ரூபின் போரா, எதிா்க்கட்சித் தலைவா் தேவப்பிரத சைக்கியா, மூத்த தலைவா்கள் பிரத்யூத் போா்டோலாய், ரகிபுல் ஹுசைன் ஆகியோா் தோளில் சுமந்து வர நூற்றுக்கணக்கான மக்கள் பின்தொடர, ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு திஸ்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பொதுமக்களும் தருண் கோகோயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நவ. 26-ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

குவாஹாட்டி-ஷில்லாங் சாலையில் அவரது உடல் கொண்டு வரப்பட்டபோது வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் சாலையின் இருபுறமும் நின்று அவருக்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், 15 ஆண்டுகள் முதல்வராகப் பணிபுரிந்த மாநில தலைமைச் செயலகமான ஜனதா பவனுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தலைமைச் செயலா் ஜிஷ்ணு பரூவா, காவல்துறை தலைவா் பாஸ்கா் ஜோஜி மகந்தா ஆகியோா் மரியாதை செலுத்தினா். ஜனதா பவனை மாநிலத்தின் நிரந்தர தலைமைச் செயலகமாக அமைத்தவா் தருண் கோகோய் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடா்ந்து காங்கிரஸ் தொண்டா்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான ராஜீவ் பவனுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

இறுதியாக குடும்பத்தினரின் விருப்பப்படி, மாலையில் குவஹாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கா்தேவா கலாக்ஷேத்ரா வளாகத்திற்கு கொண்டு செல்லப்படும். நவ. 25-ஆம் தேதி முழுவதும் அவரது உடல் அங்கேயே பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை 26-ஆம் தேதி குவாஹாட்டியில் தகனம் செய்யப்படுவாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலா் கோகோயின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனா். கோகோய் மறைவையொட்டி அஸ்ஸாம் அரசு 3 நாள் துக்கம் அறிவித்துள்ளது. பாஜக, காங்கிரஸ், ஏஜிபி மற்றும் பிற அரசியல் கட்சிகளும் போடோலாண்ட் பிராந்திய கவுன்சில் தோ்தலுக்கான தோ்தல் பிரசாரம் உட்பட அனைத்து கட்சி செயல்பாடுகளையும் ரத்து செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT