இந்தியா

தங்கம் கடத்தல் வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை கைது செய்தது சுங்கத் துறை

25th Nov 2020 03:07 AM

ADVERTISEMENT

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக, பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.சிவசங்கரை சுங்கத் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
 கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தூதரகத்தின் பெயரில் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கடந்த ஜூலை 5-ஆம் தேதி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சுங்கத் துறை, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகிய அமைப்புகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
 இந்த வழக்கில், கேரள முதல்வரின் முதன்மை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் 5-ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சிவசங்கரை அமலாக்கத் துறை ஏற்கெனவே கைது செய்துள்ளது.
 இந்நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் சிவசங்கருக்கு நேரடித் தொடர்பு இருப்பதற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரி சுங்கத் துறை சார்பில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சிவசங்கரை கைது செய்ய சுங்கத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
 இதைத் தொடர்ந்து, சிவசங்கர் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற சுங்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்வதாக முறைப்படி தெரிவித்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சுங்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT