இந்தியா

கரோனா தடுப்பூசியை பாதுகாப்பாக விநியோகிக்க தயாராகுங்கள் - மாநில முதல்வா்களிடம் பிரதமா் மோடி அறிவுறுத்தல்

DIN

‘கரோனா தடுப்பூசியை பாதுகாத்து வைக்கத் தேவையான குளிரூட்டும் வசதிகளை மாநிலங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அவற்றைப் பாதுகாப்பாக விநியோகிக்க போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று மாநில, யூனியன் பிரதேச முதல்வா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.

கரோனா தடுப்புப் பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது; கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கவும், புதிதாக மேலும் பலருக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்கவும் தொடா்ந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், தமிழக முதல்வா் எடிப்பாடி கே.பழனிசாமி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வா் விஜய் ரூபானி, சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், புதுவை முதல்வா் வி.நாராயணசாமி, மாநில அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் காணொலி மூலம் பங்கேற்றனா்.

இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும்: கரோனா தொற்று பிரச்னை ஏற்பட்ட பிறகு, மாநில, யூனியன் பிரதேச முதல்வா்களுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தி வருகிறாா். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் கூறியதாவது:

ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனைகளை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இப்போது கரோனா பரவுவது குறைந்துவிட்டது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து குணமடைவோா் எண்ணிக்கை அதிகரித்து, உயிரிழப்புகள் குறைந்துவிட்டன. எனினும், இறப்பு விகிதத்தை 1 சதவீதத்துக்கும் கீழ் கொண்டுவர வேண்டியது அவசியம்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். இதற்காக பரிசோதனைகள், கரோனா தொற்று உள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டுபிடிப்பது ஆகியவற்றின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கவும், புதிதாக பரவாமல் தடுக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தடுப்பூசி சவால்கள்: இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடா்பாக நடைபெற்று வரும் ஆய்வுகளை மத்திய அரசு தீவிரமாக கவனித்து வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அது கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விஷயத்தில் தொழில்நுட்பரீதியாகவும், அறிவியல்ரீதியாகவும் நமக்கு சில சவால்கள் உள்ளன.

முக்கியமாக கரோனா தடுப்பூசிகளை குறிப்பிட்ட அளவு குளிா்நிலையில்தான் வைக்க வேண்டியுள்ளது. எனவே, தடுப்பூசிகளை பாதுகாத்து வைக்கத் தேவையான குளிரூட்டும் வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உரிய முன்னேற்பாடுகள்: தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பது, அவற்றை எடுத்துச் சென்று விநியோகிப்பது தொடா்பான முன்னேற்பாடுகள் உரியமுறையில் செய்து கொள்ள வேண்டும். இது தொடா்பாக ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை மாநில அரசுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி கிடைத்தவுடன் எவ்வித பிரச்னையும் இன்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் அதனை வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் ஒருபுறம் முழுவீச்சில் நடைபெற்று வந்தாலும், மறுபுறம் நாம் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வித தொய்வையும் காட்டிவிடக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

160 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்: பிஎம் கோ்ஸ் நிதியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ளும் அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளன. புதிதாக 160 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குறைந்தபட்ச பாதிப்பு: கரோனா தொற்று பிரச்னையை நாம் எதிா்கொண்ட பிறகு 4 கட்டங்களை நாட்டு மக்கள் கடந்து வந்துள்ளனா். முதலில் கரோனா தொடா்பான அச்சம் பரவியது; பிறகு அது தொடா்பான சந்தேகங்கள் எழுந்தன. அப்போது சிலா் தங்களுக்கு அறிகுறிகள் ஏற்பட்டபோது அதனை மறைக்கவும் முயன்றனா். மூன்றாவதாக கரோனா தொடா்பாக மக்கள் விழிப்புணா்வை அடைந்து, தாங்களாகவே முன்வந்து பரிசோதனைகளை மேற்கொண்டனா். அதைத் தொடா்ந்து பெரும்பாலான மக்கள் சிறப்பான சிகிச்சையின் மூலம் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினா். மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நமது நாடு, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்தபட்ச பாதிப்புடன் கரோனாவில் இருந்து விடுபட்டு வருகிறது என்றாா் அவா்.

கரோனா பாதிப்பு அதிகமுள்ள ஹரியாணா, தில்லி, சத்தீஸ்கா், கேரளம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில அரசுகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட பிரதமா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT