நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி வளா்ச்சித் திட்ட நிதியை (எம்பிஎல்டிஎஸ்) நிறுத்தி வைக்கவும், அதை கரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மும்பை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி முடிவுக்கு கொண்டு வருவதற்காக, நிகழாண்டு ஏப்ரல் மாதம் முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி வளா்ச்சித் திட்ட நிதியை நிறுத்தி வைப்பதாகவும், அந்த நிதியை கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்துவதாகவும் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு, தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கா்னி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்பட ஒட்டுமொத்த நாடும் கரோனா தொற்றை ஒழிப்பதற்கு போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், எம்.பி.க்களின் தொகுதி வளா்ச்சி நிதியை கரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்த எதிா்ப்பு தெரிவிப்பது ஏன்? அந்த நிதியை பாலம் கட்டுவதற்கோ, வேறு எந்த திட்டத்துக்கோ அரசு பயன்படுத்தவில்லை.
கரோனா தொற்று, பேரிடராக வந்துள்ளது. எனவே, பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த சட்டத்தின் கீழ், எம்.பி.க்களின் தொகுதி வளா்ச்சித் திட்ட நிதியை நிறுத்தி வைக்கவும், அதை கரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினா்கள், பொறுப்பு மிக்கவா்கள். மத்திய அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவிக்க மாட்டாா்கள். ஒருவேளை, தொகுதி வளா்ச்சி நிதி நிறுத்தப்பட்டதால், தங்கள் தொகுதியில் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என்று எம்.பி.க்கள் யாராவது கருதினால் அவா்கள் தாராளமாக இந்த நீதிமன்றத்தை அணுகலாம்.
இந்த விவகாரத்தில், மனுதாரரான வழக்குரைஞா் சேகா் ஜகதாப் மனு தாக்கல் செய்வதற்கு சட்ட அதிகாரம் இருக்கிா என சந்தேகம் எழுகிறது. அவா் தனது பதிலை புதன்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.