இந்தியா

பஞ்சாப் விவசாயிகள் சங்கங்களுடன் டிச.3-இல் இரண்டாவது சுற்று பேச்சு: மத்திய அரசு அழைப்பு

25th Nov 2020 03:24 AM

ADVERTISEMENT

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய அரசின் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி தில்லியில் நடைபெறுகிறது.
 மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டங்களில் வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்களை கொள்முதல் செய்யும் நடைமுறைக்கு இந்த சட்டங்கள் முடிவு கட்டிவிடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து மாற்று சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.
 பஞ்சாபில் சுமார் இரண்டு மாதகாலமாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வந்ததால் சரக்கு ரயில் சேவைகள் உள்பட அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால் மாநிலத்தில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
 இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக, விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய அரசின் முதல் சுற்று பேச்சுவார்த்தை, கடந்த 13 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் தங்கள் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்ததால் முடிவு ஏதும் ஏற்படவில்லை.
 இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர், முதல்வர் அமரீந்தர் சிங்கை கடந்த சனிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க அவர்கள் முடிவு செய்து, திங்கள்கிழமை (நவ.23) முதல் 15 நாள்களுக்கு ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்தனர். எனினும் தங்கள் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சு நடத்தாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
 இந்த சூழலில், இடண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உணவுத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே பிடிஐ நிருபருக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கங்களுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சார்பில் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்குமாறு பஞ்சாப் மாநிலத்தின் உணவுத் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என நம்புகிறோம்.
 விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். பழைய வேளாண் சட்டங்களிலும், புதிய வேளாண் சட்டங்களிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் (என்.எஃப்.எஸ்.ஏ) மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பொது விநியோகத் திட்டம் இருக்கும்வரை குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். பிரதமர் நரேந்திர மோடியும் இவ்வாறே தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று வேளாண் துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளார் என்றார் அவர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT