இந்தியா

கேரள உள்ளாட்சித் தேர்தல்: மலப்புரத்தில் இரு முஸ்லிம் பெண்களை வேட்பாளராக களமிறக்கிய பாஜக

25th Nov 2020 03:31 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் முஸ்லிம் பெண் வேட்பாளர்கள் இருவர் போட்டியிடுகின்றனர்.
 கேரள தேர்தல் வரலாற்றில் பாஜக சார்பில் ஏற்கெனவே முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் போட்டியிட்டிருந்தாலும், முதல் முறையாக முஸ்லிம் பெண் வேட்பாளர்களை அக்கட்சி களமிறக்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
 முஸ்லிம்கள் அதிகம் உள்ள மலப்புரம் மாவட்டம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கோட்டை என அறியப்படுகிறது. இங்கு டிச. 14-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
 இத்தேர்தலில் வண்டூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான டி.பி.சுல்ஃபத் வண்டூர் கிராம ஊராட்சி 6-ஆவது வார்டிலும், ஆயிஷா ஹுசைன் என்பவர் பொன்முண்டம் கிராம ஊராட்சி 9-ஆவது வார்டிலும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
 இதுகுறித்து சுல்ஃபத் கூறியது: முத்தலாக் தடை, பெண்களுக்கான திருமண வயதை 18-இலிருந்து 21-ஆக உயர்த்துவது ஆகிய பாஜகவின் கொள்கைகள் என்னை ஈர்த்தன. முஸ்லிம் பெண்களின் நலனை கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகள் இவை. இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்றார்.
 15 வயதில் திருமணமான சுல்ஃபத் இப்போது இரு குழந்தைகளுக்கு தாய். ஓர் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டுமென்பது சுல்ஃபத்தின் கனவு. ஆனால், இளம் வயதிலேயே திருமணமானதால் அவர் 10-ஆம் வகுப்புடன் தனது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதாயிற்று. தற்போது தனது குடும்பத் தொழிலான ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள சுல்ஃபத், தனது வார்டில் அபார வெற்றி பெறும் நம்பிக்கையில் இருக்கிறார்.
 பாஜக சார்பில் போட்டியிடும் மற்றொரு பெண் வேட்பாளரான ஆயிஷா ஹுசைன், தன் கணவர் ஹுசைன் மூலமாக பாஜகவில் ஈர்க்கப்பட்டவர். பாஜகவின் சிறுபான்மையினர் அணியில் உறுப்பினராக உள்ளார் ஹுசைன் . 10 வயது பெண் குழந்தைக்கு தாயான ஆயிஷா, முஸ்லிம் பெண்களுக்கான முன்னேற்றத்துக்காக நரேந்திர மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள கொள்கைகளை ஆதரிப்பதாக கூறுகிறார்.
 ஆயிஷாவின் கணவர் ஹுசைனும் மலப்புரம் மாவட்ட ஊராட்சியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
 மலப்புரம் மாவட்டத்தில் பாஜக பலவீனமாக இருந்தாலும், முஸ்லிம் சமூகத்தை ஈர்க்கும் வகையில் இரு முஸ்லிம் பெண்களை தனது வேட்பாளராக பாஜக நிறுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT