இந்தியா

கிராமப்புற பொருளாதாரமும் வேளாண்மையும் நாட்டின் சுயசார்புக்கு முக்கியமானவை: நிதின் கட்கரி

25th Nov 2020 03:32 AM

ADVERTISEMENT

நாடு சுயசார்புத்தன்மையை அடையவும், வளமான, சக்தி வாய்ந்த நாடாக மாறவும் கிராமப்புற பொருளாதாரமும், வேளாண்மையும் அவசியமான காரணிகள் என்று சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 சிம்பியோசிஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம் நடத்திய இணையவழி கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற கட்கரி, 'சுயசார்பு பாரதம்' என்ற தலைப்பில் மேலும் பேசியதாவது:
 நாடு ஒவ்வொரு துறையிலும் சுயசார்பை அடைவதற்காக கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் தனிப் பொறுப்பல்ல. கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளின் கூட்டுப் பொறுப்பாகும். இதற்காக ஒவ்வொரு துறையும் தான் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.
 கிராமப்புற பொருளாதாரம், வேளாண்மை ஆகிய இரண்டு துறைகளும் நாட்டின் சுயசார்புத்தன்மைக்கு முக்கியமானவை. இவை இரண்டும் சரியாக இருந்தால் கிராமப்புற இந்தியா வளமானதாகும். எனவே இவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
 விவசாயிகள், கிராமங்கள், சிறு நகரங்களை பலப்படுத்துவதன் மூலம் நாடு சுயசார்பை அடைய முடியும். இறக்குமதியையும், மிகையான ஏற்றுமதியையும் குறைக்க வேண்டும்.
 கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஆனால், நமது கரும்பு விவசாயிகள் மூலம் மாற்று எரிபொருளான எத்தனாலை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும். இதுபோல இறக்குமதிக்கு மாற்றான பொருள்களை அடையாளம் காண வேண்டும்.
 கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் கிராமப்புற தொழில் துறையின் வருவாயை ரூ.80 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்த குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
 உயிரி எரிபொருள், சூரியசக்தி, காற்றாலை மின்சாரம், இயற்கை வேளாண்மை போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த இலக்கை எட்ட முடியும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT