இந்தியா

அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

25th Nov 2020 03:28 AM

ADVERTISEMENT

குவாஹாட்டியில் காலமான அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் உடலுக்கு ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகோய் (84) கரோனா தொற்றுக்குப் பிந்தைய பல்வேறு கோளாறுகளால் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஜிஎம்ஜிஎச்) அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். அவருக்கு டோலி என்ற மனைவியும், சந்திரிமா என்ற மகளும், கெளரவ் கோகோய் என்ற மகனும் உள்ளனர்.
 இதையடுத்து ஜிஎம்ஜிஎச்சில் இருந்து அவரது உடலை அவரது மகனும், எம்.பி.யுமான கெளரவ் கோகோய் பெற்றுக் கொண்டார்.
 கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உடல் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்டு திஸ்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து அவரது உடலை எடுத்து வந்த வாகனத்தை நூற்றுக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்து ஊர்வலமாக வந்தனர்.
 குவாஹாட்டி-ஷில்லாங் சாலையில் அவரது உடல் கொண்டு வரப்பட்டபோது வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் சாலையின் இருபுறமும் நின்று அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
 மறைந்த தருண் கோகோயின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
 பின்னர், 15 ஆண்டுகள் முதல்வராகப் பணிபுரிந்த மாநில தலைமைச் செயலகமான ஜனதா பவனுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தலைமைச் செயலர் ஜிஷ்ணு பரூவா, காவல்துறை தலைவர் பாஸ்கர் ஜோஜி மகந்தா ஆகியோர் மரியாதை செலுத்தினர். ஜனதா பவனை மாநிலத்தின் நிரந்தர தலைமைச் செயலகமாக அமைத்தவர் தருண் கோகோய் என்பது குறிப்பிடத்தக்கது.
 இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான ராஜீவ் பவனுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
 இறுதியாக குடும்பத்தினரின் விருப்பப்படி, மாலையில் குவஹாட்டியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவ கலாúக்ஷத்ரா வளாகத்திற்கு கொண்டு செல்லப்படும். நவ. 25-ஆம் தேதி முழுவதும் அவரது உடல் அங்கேயே பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். இதைத் தொடர்ந்து குவாஹாட்டியில் வியாழக்கிழமை தகனம் நடைபெறும்.
 இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நவ. 26-ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் தருண் கோகோயின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனர். தருண் கோகோய் மறைவையொட்டி அஸ்ஸாம் அரசு 3 நாள் துக்கம் அறிவித்துள்ளது. பாஜக, காங்கிரஸ், அஸ்ஸாம் கண பரிஷத் மற்றும் பிற அரசியல் கட்சிகளும் போடோலாண்ட் பிராந்திய கவுன்சில் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் உட்பட அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் ரத்து செய்துள்ளன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT