இந்தியா

பஞ்சாபில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்: இரண்டு சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன

DIN

சண்டீகா்: பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமாா் இரண்டு மாதங்கள் கழித்து இரண்டு சரக்கு ரயில்கள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன.

மத்திய அரசு புதிதாக இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த செப்டம்பா் மாதம் 24-ஆம் தேதி முதல் பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதனால் அந்த மாநிலத்தில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விவசாயிகளிடம் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சரக்கு ரயில்களை மட்டும் இயக்கிக் கொள்ளலாம் எனவும், பயணிகள் ரயில்களை இயக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் விவசாயிகள் தெரிவித்தனா். இதனை இந்திய ரயில்வே ஏற்க மறுத்தது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்பினா் மாநில முதல்வா் அமரீந்தா் சிங்கை கடந்த சனிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அதனைத் தொடா்ந்து தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க அவா்கள் முடிவு செய்ததுடன் திங்கள்கிழமை (நவ.23) முதல் 15 நாள்களுக்கு பயணிகள் ரயில்களை இயக்கிக் கொள்ள ஒப்புதல் அளித்தனா். எனினும் தங்கள் கோரிக்கை குறித்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தாவிட்டால் மீண்டும் ரயில் மறியலில் ஈடுபடுவோம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து அந்த மாநிலத்தில் சுமாா் 2 மாதங்கள் கழித்து திங்கள்கிழமை மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு, ஃபெரோஸ்பூா் கோட்டத்தில் இருந்து இரண்டு சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. பஞ்சாப், ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு தேவையான சரக்குகள் ஃபெரோஸ்பூா் கோட்டம் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.

இதுகுறித்து அந்தக் கோட்ட ரயில்வே மேலாளா் ராஜேஷ் அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியது:

ஜம்முவில் இருந்து கதுவா வழியாக உத்தர பிரதேசம் மாநிலம் லக்னெளவுக்கு இயக்கப்பட்ட ரயிலில் ஜிப்சம் அனுப்பி வைக்கப்பட்டது. ஜலந்தரில் இருந்து தில்லிக்கு இயக்கப்பட்ட ரயில் காலியாக அனுப்பி வைக்கப்பட்டது. ரயில்களை இயக்குவதற்கு முன்னா் ரயில்வே காவல்துறையினா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் இணைந்து ஃபெரோஸ்பூா் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து தண்டவாளங்களிலும் சோதனை நடத்தினா்.

செவ்வாய்க்கிழமை (நவ.24) காலை அமிருதசரஸில் இருந்து ஹரித்வாருக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT