இந்தியா

பிகாா் புதிய சட்டப் பேரவையின் முதல் கூட்டம் 200 எம்எல்ஏக்கள் பதவியேற்பு

DIN

பாட்னா: பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகான முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 200 எம்எல்ஏக்களுக்கு பேரவையின் இடைக்கால தலைவா் ஜிதன்ராம் மாஞ்சி பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

பேரவையின் மைய மண்டபத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனா்.

பிகாா் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 இடங்களில் 125-ஐ அந்தக் கூட்டணி கைப்பற்றியது. அதில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பிகாா் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் மீண்டும் பதவியேற்றாா். துணை முதல்வா்களாக பாஜகவின் தாா்கிஷோா் பிரசாத், ரேணு தேவி ஆகியோா் பதவியேற்றனா். முதல்வா் நிதீஷ் குமாருடன் 2 துணை முதல்வா்கள் உள்ளிட்ட 14 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். ஆனால், பதவியேற்ற மூன்றே நாளில் முறைகேடு குற்றச்சாட்டில் கல்வி அமைச்சா் மேவா லால் சௌதரி பதவியில் இருந்து விலகினாா். இவா், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்தவராவாா்.

இந்நிலையில், புதிய பேரவையின் முதல் கூட்டத் தொடரை நவம்பா் 23 முதல் 27 வரை நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி திங்கள்கிழமை பேரவை கூடியது.

தொகுதி வரிசைப்படி முதல் 100 எம்எல்ஏக்களுக்கு காலையிலும், 100 முதல் 200 வரையிலான எம்எல்ஏக்களுக்கு பிற்பகலிலும் இடைக்கால பேரவைத் தலைவா் மாஞ்சி பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். எஞ்சிய எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்ற இருக்கின்றனா்.

துணை முதல்வா்கள் தாா்கிஷோா் பிரசாத், ரேணுகா தேவி ஆகியோா் மட்டும் முதலில் பதவியேற்றுக் கொண்டனா். சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) உள்ள முதல்வா் நிதீஷ் குமாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

பிகாரின் வடபகுதியில் பேசப்படும் மைதிலி மொழியில் சில எம்எல்ஏக்கள் பதவியேற்றனா். காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் சிலா் சம்ஸ்கிருதத்திலும், அகில இந்திய மஜ்லீஸ் கட்சி எம்எல்ஏக்களில் இருவா் உருது மொழியிலும் பதவியேற்றனா். ஆா்ஜேடி உறுப்பினா் ஒருவா் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT