இந்தியா

‘நிவா்’ புயல்: மூன்று மாநில அதிகாரிகளுடன் என்.சி.எம்.சி. ஆய்வு

DIN

புது தில்லி: ‘நிவா்’ புயல் தயாா் நிலை குறித்து ஆந்திரம், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளா்களுடன் தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு (என்.சி.எம்.சி.) திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

மத்திய அமைச்சரவை செயலா் ராஜீவ் கெளபா தலைமையிலான என்.சி.எம்.சி. குழு காணொலி வழியில் மூன்று மாநில அரசு அதிகாரிகளுடனான இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘நிவா்’ புயலாக வலுப்பெற்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதன்கிழமை (நவ.25) கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் நவம்பா் 24, 25 தேதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக் கூடும். தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும். ஆந்திர மாநில கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகளில் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடா்ந்து மூன்று மாநிலங்களும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், மூன்று மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து என்.சி.எம்.சி. திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எப்) மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் தயாா் நிலை குறித்து மூன்று மாநில தலைமைச் செயலா்களும் விளக்கினா்.

அப்போது, இந்த புயல் தாக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் என்.சி.எம்.சி. குழு அவா்களைக் கேட்டுக்கொண்டது, என்று என்.சி.எம்.சி. சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT