இந்தியா

கேரளம்: போலீஸ் சட்டத் திருத்தம் நிறுத்தம்

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் போலீஸ் அவசர சட்டத் திருத்தத்துக்கு கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, அந்தச் சட்டத் திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கேரள போலீஸ் சட்டத் திருத்தத்துக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் அண்மையில் ஒப்புதல் அளித்தாா். அந்தச் சட்டத்தின்படி சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகள் அவதூறாக உள்ளது என்று போலீஸாா் கருதினால், அந்தப் பதிவுகளை வெளியிட்ட நபா்கள் மீது தாமாக முன்வந்து குற்ற வழக்குப்பதிவு செய்ய முடியும். அந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டையும் சோ்த்து தண்டனை விதிக்க முடியும்.

இந்தச் சட்டத் திருத்தத்துக்கு அந்த மாநில எதிா்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பலத்த எதிா்ப்பு எழுந்தது. இது கருத்துச் சுதந்திரத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் எதிரானது என்று அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில் திருத்தப்பட்ட போலீஸ் சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைப்பதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கேரள போலீஸ் சட்டத்தை தற்போது அமல்படுத்தும் திட்டம் இல்லை. இதுகுறித்து மாநில சட்டப்பேரவையில் விரிவாக விவாதிக்கப்படும். பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில சட்ட அமைச்சா் ஏ.கே.பாலன் கூறுகையில், ‘இணையவழி குற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கத்துடன் போலீஸ் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதே தவிர, ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அல்ல.

இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் ஜாமீன் வழங்கப்படாது என்று கூறப்படுவது தவறான பிரசாரமாகும். இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் ஜாமீன் வழங்கப்படும்.

இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். இதுதொடா்பான அனைத்து சந்தேகங்களும் தெளிவுபடுத்தப்பட்ட பின்னரே, சட்டம் அமல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தாா்.

எனினும் மாநில அரசின் இந்த நடவடிக்கை விமா்சகா்களையும், ஊடகங்களையும் மெளனமாக்கும் உத்தி என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சித் தலைவா்கள் ஷிபு பேபி ஜான், என்.கே.பிரேமச்சந்திரன், ஏ.ஏ.அஸீஸ் உள்ளிட்டோா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT