இந்தியா

"ஹிந்துஸ்தான்'வார்த்தையை மாற்றக் கோரிய ஒவைஸி கட்சி எம்எல்ஏ

24th Nov 2020 06:42 AM

ADVERTISEMENT


பதவிப் பிரமாணம் ஏற்கும்போது "ஹிந்துஸ்தான்' என்ற வார்த்தைக்கு பதிலாக "பாரதம்' என்று உச்சரிக்க ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்மையில் நடைபெற்ற பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவிப் பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இடைக்கால பேரவைத் தலைவரான ஜிதன் ராம் மாஞ்சி அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

அசாதுதீன் ஒவைஸி கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) சார்பில் போட்டியிட்டு வென்ற 5 பேரில் ஒருவரான அக்தருல் இமான் உருது மொழியில் பதவிப் பிரமாணம் ஏற்க எழுந்தவுடன், உறுதிமொழியில் "ஹிந்துஸ்தான்' என்ற வார்த்தைக்கு பதிலாக அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள "பாரதம்' என்ற வார்த்தையை உச்சரிக்க அனுமதி கோரினார்.

ADVERTISEMENT

இதனால் திகைப்படைந்த மாஞ்சி, உருது மொழியில் பதவிப் பிரமாணம் ஏற்கும்போது மரபுப் படி "ஹிந்துஸ்தான்' என்றே உச்சரிக்க வேண்டும் என்றார். இருப்பினும், "பாரதம்' என்ற வார்த்தையை உச்சரிக்க அனுமதி வழங்கினார்.

பதவியேற்புக்குப் பின் வெளியே வந்த அக்தருல் இமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஹிந்துஸ்தான் என்ற வார்த்தைக்கு நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் பாரதம் என்றுதானே உள்ளது என்பதை சுட்டிக்காட்டினேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்பதால், அதில் உள்ள பெயரிலேயே நமது நாட்டை அழைப்பதுதானே பொருத்தமானது.

கவிஞர் இக்பாலின் கவிதையான "ஸாரே ஜஹான் ஸேஅச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா' என்ற கவிதை வரிகளைப் படித்து வளர்ந்த எனக்கு ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை குறித்து எந்தப் பிரச்னையும் இல்லை.

காங்கிரஸ் எம்எல்ஏவான ஷகில் அகமது கான் விருப்பப்பட்டு சம்ஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் ஏற்றதைப் பாராட்டுகிறேன் என்றார்.

இது குறித்து முன்னாள் அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவுமான மதன் சாஹ்னி கூறுகையில், "ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை இயல்பாகப் புழக்கத்தில் உள்ளது. தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்காக சிலர் இதுபோல தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்புகிறார்கள்' என்றார்.

பாஜக எம்எல்ஏ நீரஜ் சிங் பப்லு கூறுகையில், "ஹிந்துஸ்தான் என்ற வார்த்தையை உச்சரிக்க விரும்பாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்' என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT