வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளிக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்தே தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நண்பகல் 12 மணியளவில் தீர்ப்பளிக்கிறது.
மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட விரும்பியதாகவும், ஆனால் தேர்தலுக்கு முன்பாக வேட்பு மனுத் தாக்கல் நிராகரிக்கப்பட்டதாகவும் தேஜ் பகதூர் சமர்ப்பித்துள்ளார்.
தேஜ் பகதூர் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், நவம்பர் 18-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில் நாளை நண்பகல் 12 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்படுகிறது.
2017-இல் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் விடியோ வெளியிட்டதன் காரணத்தினால் தேஜ் பகதூர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.