இந்தியா

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2.6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள்: பிரதமர்

22nd Nov 2020 04:09 PM

ADVERTISEMENT

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2.6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின்  விந்தியாச்சல் பகுதியில் உள்ள மிர்சாப்பூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் ஊரகக் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியின்போது கிராம தண்ணீர் மற்றும் சுகாதார குழுவின் உறுப்பினர்களோடு பிரதமர் உரையாடினார். மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் மற்றும் அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ள திட்டங்களின் மூலம் 2,995 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்புகள் அளிக்கப்படும். இதன் மூலம் சுமார் 42 லட்சம் பேர் பயனடைவர். இத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக கிராம தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களுக்காக ரூ. 5,555.38 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 24 மாதங்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டது முதல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் உட்பட நாட்டில் 2 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிதண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஜல் ஜீவன் இயக்கத்தின் வாயிலாகத் தங்களது வீடுகளிலேயே குடிதண்ணீர் கிடைப்பதால் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை மிகவும் சுலபமாகி இருப்பதாக அவர் மேலும் கூறினார். 

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றின் அபாயம் இன்னும் நீடிப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிக சிரத்தையுடன் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Tags : pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT