இந்தியா

காங்கிரஸில் கிளர்ச்சியாளர்கள் இல்லை: குலாம் நபி ஆசாத்தின் விரிவான நேர்காணல்

22nd Nov 2020 08:05 PM

ADVERTISEMENT


காங்கிரஸ் கட்சியில் கிளர்ச்சியாளர்கள் இல்லை, சீர்த்திருத்தம் வேண்டிய தலைவர்கள்தான் உள்ளனர் என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் பேசியதாவது:

"காங்கிரஸ் கட்சியில் கிளர்ச்சியாளர்கள் இல்லை. நாங்கள் சீர்த்திருத்தத்தை நோக்கிதான் உள்ளோம். கிளர்ச்சியாளர்கள் என்றால் யாரையாவது மாற்றுவது. கட்சித் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களே இல்லை. இது கிளர்ச்சிக்காக இல்லை, சீர்த்திருத்தத்துக்காக. கட்சியின் நலனுக்கு எது அவசியமோ அதை நோக்கி வழிநடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் நாங்கள். 

புத்துணர்ச்சிக்கான தேவை உள்ளது. அதற்கு நாங்கள் புதிய யுத்தி குறித்து சிந்திக்க வேண்டும். அமைப்பை மாற்ற வேண்டும். தோல்விகள் குறித்து நாங்கள் அனைவரும் வருத்தத்தில்தான் உள்ளோம். குறிப்பாக பிகார் மற்றும் இடைத்தேர்தல் தோல்வி முடிவுகள் குறித்து கவலையில் உள்ளோம். தோல்விகளுக்கு தலைமையைக் குறை கூற மாட்டோம். எங்களது நிர்வாகிகள் களத்தில் தொடர்பை இழந்துவிட்டார்கள். கட்சிக்காக எதையும் செய்ய வேண்டும் என்கிற வேட்கை அவசியம்.

ADVERTISEMENT

தேர்தல் என்பது நட்சத்திர விடுதி கலாசாரத்தால் போட்டியிடுவது அல்ல. இன்றைய தலைவர்களிடம் உள்ள பிரச்னை என்னவென்றால், கட்சி சார்பில் இடம் கிடைத்துவிட்டால், அவர்கள் செய்யும் முதல் காரியம் நட்சத்திர விடுதியில் முன்பதிவு செய்வது. கரடு முரடான பாதை இருந்தால் அவர்கள் செல்வதில்லை. நட்சத்திர விடுதி கலாசாரத்தைத் தவிர்க்கும் வரை, தேர்தலில் வெற்றி பெற முடியாது.

கட்சி நிர்வாகிகள் தங்களது பொறுப்புகளை உணர வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுவிட்டால், அதன்பிறகு பொறுப்பை உணர்ந்துவிடுவார்கள். தற்போது யார் வேண்டுமானாலும், கட்சியில் எந்தப் பதவி வேண்டுமானாலும் பெறலாம். 

தொண்டர்களுக்கு கட்சித் தலைமை திட்டங்களை வழங்க வேண்டும். பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். ஒருவர் இல்லாத நேரத்தில் கட்சித் தலைமை அவரிடம் கருத்துக் கேட்கும் அளவுக்கு இன்றியமையாதவராக இருக்க வேண்டும்.

நான் காந்தி குடும்பத்தினர் மீது குறைகூறவில்லை. கரோனா தொற்று காலத்தில் தற்போது அவர்களால் பெரிதளவில் செய்ய முடியாது. எங்களது கோரிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. எங்களது பெரும்பாலான கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பாஜகவுக்கான மாற்றாக வேறு யாராலும் இருக்க முடியாது. பாஜக தேசியக் கட்சி. ஒரு தேசியக் கட்சிக்கு தேசம் சார்ந்து சிந்தனை இருக்க வேண்டும். தேசிய அளவில் இருப்புத்தன்மையும் அவசியம். மதச்சார்பின்மை சிந்தனையும் அவசியம். கடந்த 72 ஆண்டுகளில் காங்கிரஸ் தற்போது மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. கடந்த 2 முறையாக மக்களவையில் எதிர்க்கட்சி பதவிகூட காங்கிரஸிடம் இல்லை. ஆனால், லடாக் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் 9 இடங்களை வென்றது. நாங்கள் இந்த அளவிலான நேர்மறையான முடிவை எதிர்பார்த்திராத போதிலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

கட்சியை மீட்டெடுத்து, தேசத்துக்கான மாற்றாக மாற வேண்டுமானால், எங்களது கட்சித் தலைமை தேர்தல் நடத்த வேண்டும். ஒவ்வொரு வட்டம் முதல் தேசிய அளவிலான பொறுப்பு வரை தேர்தலை நடத்துவது முக்கியம். கட்சிக்கு திட்டங்களை வழங்க வேண்டிய தேவை உள்ளது. பொறுப்புணர்ச்சியும் முக்கியம்.

கட்சியின் அமைப்பு முறை சரிந்துவிட்டது. கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அந்த அமைப்பு முறையிலிருந்து ஒரு தலைவர் தேர்வு செய்யப்பட்டால், அது பயனளிக்கும். ஆனால், தலைவரை மாற்றுவதன்மூலமே பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது தவறு. கட்சியின் அமைப்பை மாற்றினால், அது நடக்கும்" என்றார் குலாம் நபி ஆசாத்.

கட்சியில் மாற்றங்கள் கோரி இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 23 தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT