இந்தியா

ஐஎம்ஏ முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது

22nd Nov 2020 09:09 PM

ADVERTISEMENT

ஐ.எம்.ஏ. முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரோஷன் பெய்க்கை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கைதான ரோஷன் பெய்க் கர்நாடக மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎம்ஏ சீட்டு நிறுவனத்தை மன்சூர் கான் என்பவர் நடத்தி வந்தார். நிறுவனத்தில் சேமிக்கப்படும் தொகைக்கு, அதிக வட்டி வழங்கப்படும் என்று உறுதியளித்து, லட்சக்கணக்கான மக்களிடம் பணம் பெற்றுள்ளார். பணம் செலுத்தியவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவர். தனது நிறுவனத்தில் பணத்தைச் சேமிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தும்படி மதபோதகர்கள் சிலரிடமும் அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.ரோஷன் பெய்க், தன்னிடம் இருந்து ரூ.400 கோடி பெற்றதாகவும், அதைத் திருப்பித் தர அவர் மறுத்து வருவதாகவும் குற்றம்சாட்டிய மன்சூர் கான், மத்திய, மாநில அரசுகள் ஊழலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், மன்சூர் கானிடம் இருந்து தாம் பணம் எதுவும் பெறவில்லை என பெய்க் தெரிவித்தார். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

இதைத் தொடர்ந்து, மன்சூர் கான் துபைக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து இந்தியாவுக்குக் கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி திரும்பிய வேளையில், அமலாக்கத் துறையினர் அவரைக் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இதனிடையே, இந்த வழக்கை விசாரிக்குமாறு, சிபிஐயிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 

ADVERTISEMENT

Tags : cbi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT