பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை விடுதலை செய்வதில் சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இன்று சசிகலா விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படாது.
நீதிமன்றத் தீர்ப்பின்படியும் சிறைச்சாலை விதியின்படியுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றும், நன்னடத்தை விதிகள் எதுவும் அவருக்குப் பொருந்தாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. தந்தையை பரிதவிக்கவிட்ட மகன்கள்: ரூ.1 கோடி சொத்துகளை ரத்து செய்த கோட்டாட்சியா்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 10 கோடியே 10 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார்.
இதையடுத்து, நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் அவரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத் துறை நிர்வாகத்திடம், சசிகலாவின் வழக்குரைஞர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சிறைத்துறை விதிகளின்படி சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்ற சசிகலாவுக்கு, 129 நாள்கள் சிறை விடுப்பு இருப்பதால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதில் மூலம், சசிகலா ஜனவரி மாதத்தில்தான் விடுதலையாவார் என்பது தெரிய வந்துள்ளது.
அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நான்காண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா இறந்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017-ஆம் ஆண்டு பிப். 15-ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பு நீதிமன்ற பதிவாளரிடம், சசிகலா தரப்பில் அபராதத் தொகை ரூ. 10 கோடியே 10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை கங்நம செவ்வாய்க்கிழமை மாலை செலுத்தப்பட்டுள்ளது. இதனை சசிகலாவின் வழக்குரைஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் உறுதி செய்துள்ளார். அபராதத் தொகை செலுத்தியுள்ளதை அடுத்து, சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் விடுதலை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.