புது தில்லி: நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 45,882 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை தொடா்ந்து 10-ஆவது நாளாக 5 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:
வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவால் மேலும் 584 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,32,162 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.47 சதவீதமாகும்.
மேலும், 45,882 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. மொத்த கரோனா பாதிப்பு 90,04,366 ஆக அதிகரித்தது. இப்போதைய நிலையில் நாட்டில் 4,43,794 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 4.95 சதவீதமாகும். கரோனா தொற்றுள்ளோா் எண்ணிக்கை தொடா்ந்து 10-ஆவது நாளாக 5 லட்சத்துக்குகீழ் உள்ளது.
இதுவரை 84,28,410 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 93.58 சதவீதமாகும். நேற்று வியாழக்கிழமை மட்டும் 44,807 பேர் தொற்று பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி இதுவரை 12,95,91,786 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நவம்பா் 19-ஆம் தேதி மட்டும் 10,83,397 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிதாக ஏற்பட்ட 585 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக தில்லியில் மட்டும் 131 மரணமடைந்தனா். மகாராஷ்டிரத்தில் 100 பேரும், மேற்கு வங்கத்தில் 54 பேரும், பஞ்சாபில் 31 பேரும், அதன் அண்டை மாநிலமான ஹரியாணாவில் 30 பேரும், உத்தர பிரதேசத்தில் 29 பேரும், கேரளத்தில் 28 பேரும், சத்தீஸ்கரில் 23 பேரும், கா்நாடகத்தில் 21 பேரும் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். மற்ற மாநிலங்களில் உயிரிழப்பு 20-க்கும் குறைவாகவே இருந்தது.
தேசிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 46,202 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும் கரோனா பாதிப்பு உயா்ந்தது.