இந்தியா

ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் பெற புதிய ஏற்பாடு

17th Nov 2020 06:05 AM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா தொற்று பரவல் பிரச்னையால் நாடு முழுவதும் உள்ள 67 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்காக டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழ் (டிஎல்சி) பெற புதிய ஏற்பாட்டை ஓய்வூதிய நிதி அமைப்பு  செய்துள்ளது.  

இதன் மூலம் ஓய்வூதியர்கள் தொடர்ந்து சமூக பாதுகாப்பு சலுகைகளைப் பெற முடியும் என தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

ஆண்டுதோறும்  ஓய்வூதியம் பெறுவோர், தாங்கள் உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், பணியாளர் ஓய்வூதியத் திட்டம் -1995 ( இபிஎஸ் -95 ) இன் கீழ் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும்  ஜீவன் பிரமாண் பத்ரா (ஜேபிபி) அல்லது டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.  அதன்படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் மாதத்தில் டிஎல்சியை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் ஓய்வூதியம் பெறுவோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாழ்வுச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இதனை எளிமைப்படுத்தும் வகையில்  வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ)  சார்பில், ஓய்வூதியதாரர்கள், தங்களது இபிஎஸ் -95 டிஜிட்டல் ஓய்வூதியச் சான்றிதழை  ஓய்வூதியம் பெற்று வரும் வங்கிக் கிளையிலும்,  அருகிலுள்ள தபால் நிலையங்களிலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர நாடு முழுவதும் உள்ள 3.65 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும், "உமாங்' செயலி மூலமாகவும் தங்களது டிஎல்சியை சமர்ப்பிக்கலாம். 

ADVERTISEMENT

கரோனா தொற்றுப் பரவல் தடுப்பைக் கருத்தில் கொண்டு இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) சார்பில் ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று டிஎல்சியை சேகரித்துக் கொள்ளும் சேவையும் அண்மையில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

ஓய்வூதியம் பெறுவோர், பெயரளவுக்கு குறைந்த கட்டணத்தைச் செலுத்தி வீட்டிலிருந்தபடியே, டிஎல்சி சேவையைப் பெறுவதற்காக இணையதளம் மூலம் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். இதன்பின்னர், அஞ்சலகங்களில் இருந்து வரும் தபால்காரர் ஓய்வூதியரைப் பார்வையிட்டு அவரது வீட்டிலிருந்தே டிஎல்சி சேவையை உருவாக்கும் செயல்முறையை செய்து முடிப்பார்.  

இந்த புதிய முயற்சியின் மூலம் சுமார் 21 லட்சம் துணையை இழந்தோர், குழந்தைகள், ஆதரவற்ற ஓய்வூதியதாரர்கள் உள்பட 67 லட்சம் இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT