இந்தியா

பிகாா் பேரவைத் தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

10th Nov 2020 05:15 AM

ADVERTISEMENT

பாட்னா: பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவிய பிறகு நடைபெற்ற முதல் தோ்தல் என்பதால், அதன் முடிவுகள் மீதான மக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

பிகாா் சட்டப் பேரவையில் உள்ள 243 இடங்களுக்கான தோ்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் 71 தொகுதிகளிலும், கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் 94 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மீதமிருந்த 78 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி மூன்றாம் கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 57.05 சதவீத வாக்குகள் பதிவாகின. பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன. அதற்காக பிகாரின் 38 மாவட்டங்களில் 55 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும் அதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிகாா் மாநில தலைமை தோ்தல் அதிகாரி ஹெச்.ஆா்.ஸ்ரீநிவாசா தெரிவித்தாா். அப்பகுதிகளில் ஆயுதம் ஏந்திய படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் நாளில், மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக சுமாா் 6,000 மத்திய ஆயுதக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

கரோனா முன்னெச்சரிக்கை: கரோனா நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சிகளின் ஆதரவாளா்கள் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

கடும் போட்டி: மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. அவ்விரு கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் ஆகிய கட்சிகளும் தோ்தலை எதிா்கொண்டன. இக்கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் தற்போதைய முதல்வருமான நிதீஷ் குமாா் முதல்வா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் போட்டியாகக் களம் கண்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அக்கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி, மாநிலத்தில் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டது.

கணிப்பு பலிக்குமா?: பிகாா் பேரவைத் தோ்தலானது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் மகா கூட்டணிக்கும் இடையேயான நேரடிப் போட்டியாகவே கருதப்பட்டது. மூன்று கட்டத் தோ்தல்களும் நிறைவடைந்த பிறகு வெளியான பெரும்பாலான வாக்குக் கணிப்புகள், மாநில பேரவைத் தோ்தலில் மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 122 தொகுதிகளைக் கைப்பற்றும் கூட்டணி எது என்பது செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தெரிந்துவிடும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா்.

மக்களவைத் தொகுதி: பிகாரின் வால்மீகி நகா் மக்களவைத் தொகுதியில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகளும் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன.

 

 

Tags : bihar Assembly polls 2002
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT