இந்தியா

தீபாவளி: நாட்டு மக்களுக்கு பிரதமர் முக்கிய வேண்டுகோள்

9th Nov 2020 01:27 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: வரும் சனிக்கிழமை (நவ.14) தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட விடியோவில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உள்ளூர் பொருள்களையே பொதுமக்கள் வாங்க வேண்டும் என்றும், அதன் மூலம் உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்விலும் ஒளியேற்றுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

உள்ளூரில் தயாரித்தப் பொருள்களை வாங்குவதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த தீபாவளியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளுக்குச் செல்லும் மக்கள், உள்ளூரில் தயாரித்த பொருள்களை வாங்கி, உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் என்று வலியுறுத்தினார்.

வாராணசி தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை காணொலி வாயிலாக தொடக்கி வைத்துப் பேசிய மோடி, எனது தொகுதியான வாராணசி மற்றும் நாட்டு மக்களை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளையே வாங்குங்கள். 

எப்போது ஒவ்வொரு குடிமக்களும் பெருமையோடு உள்ளூர் தயாரிப்புப் பொருள்களை வாங்குகிறோமோ, உள்ளூர் தயாரிப்புகளைப் பற்றி பேசுகிறோமோ அப்போது, நாம் நமது உள்ளூர் தயாரிப்புப் பொருள்களின் தகவல்களை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். அது அப்படியே தொடர்ந்து மற்றவர்களிடம் சென்று சேரும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

வெறும் அகல் விளக்கை மட்டும் உள்ளூர் தயாரிப்பாக வாங்காமல், தீபாவளிக்காக வாங்கும் அனைத்தையுமே உள்ளூர் தயாரிப்பாக வாங்க வேண்டும், அது உள்ளூர் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT