இந்தியா

ஆந்திரத்தில் ரயில் முன் விழுந்து ஒரே குடும்பத்தில் நால்வர் தற்கொலை

9th Nov 2020 01:44 PM

ADVERTISEMENT


விஜயவாடா: நாண்டியால் காவல்துறையினரின் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக விடியோ எடுத்து பதிவிட்ட பிறகு, ஒரே குடும்பத்தில் நால்வர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவத்தில், தற்கொலை செய்வதற்கு முன்பு நால்வரும் வெளியிட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டதன் பேரில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆட்டோ ஓட்டுநராக இருந்த அப்துல் சலாம் (45), மனைவி நூர்ஜஹான் (38), மகள் சல்மா (14), மகன் தாதி (10) ஆகியோர் கடந்த 3-ம் தேதி கவுலுரு கிராமத்தில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்வதற்கு முன்பு, நால்வரும், தங்களது தற்கொலைக்கான காரணத்தை விடியோவாகப் பதிவு செய்து, அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், நாண்டியால் காவல்துறையினரின் துன்புறுத்தல் காரணமாக தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அப்துல் சலாம், முன்பு ஒரு நகைக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு 3 கிலோ தங்க நகைகளைத் திருடியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், அவரது வீட்டிலிருந்து 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அப்துல் கைதானார். பிறகு பரோலில் வந்த அப்துல், வாழ்வாதாரத்துக்காக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன்பு, ஆட்டோவில் பயணித்த பயணி, தனது கைப்பையில் வைத்திருந்த 70 ஆயிரத்தைக் காணவில்லை என்று புகார் அளித்ததன் பேரில், அப்துல் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அப்துல்லிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அப்துல், தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அப்துல் வெளியிட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார். அப்துலை விசாரித்த காவலர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT