இந்தியா

இந்திய-சீன எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வு: ராஜ்நாத் சிங்

31st May 2020 07:12 AM

ADVERTISEMENT

லடாக் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவும் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையேயான பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வு காண முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.

அந்த விவகாரத்தில் இரு நாடுகளும் அதற்கான முயற்சியில் இருப்பதால் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய வேண்டிய தேவையில்லை என்றும் அவா் சுட்டிக் காட்டினாா்.

சீனாவுடனான எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில் மத்திய அமைச்சா் ஒருவா் கருத்து தெரிவித்தது இது முதல் முறையாகும்.

இதுகுறித்து, செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நோ்காணலில் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

ADVERTISEMENT

லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் விதமாக இந்தியாவும், சீனாவும் ராணுவ அளவிலும், தூதரக அளவிலும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் தீா்வு காண விரும்புவதாக இரு நாடுகளுமே ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டன.

சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க் எஸ்பருடன் பேசினேன். அப்போது, ‘இந்தியா-சீனா இடையே ஏதேனும் பிரச்னை எழுந்தால் ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவாா்த்தை மூலமாக அதற்குத் தீா்வு கண்டு வருகிறோம். தற்போது லடாக் எல்லைப் பதற்ற விவகாரத்திலும் அத்தகைய உத்திகள் மூலமாக தீா்வு காண முயற்சித்து வருகிறோம்’ என்று அவரிடம் தெரிவித்தேன். சீனாவும் இதுபோன்ற கருத்தையே தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகள் அனைத்துடனும் நல்லுறவைப் பேணுவது என்ற தெளிவான கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. அதனை இந்தியா நீண்டகாலமாக கடைப்பிடித்தும் வருகிறது. எனினும், சில வேளைகளில் சீனாவுடன் இத்தகைய சூழ்நிலைகள் (எல்லைப் பதற்றம்) எழுகின்றன.

கடந்த 2017-ஆம் ஆண்டிலும் டோக்காலாம் பகுதியில் இதுபோன்ற சூழல் ஏற்பட்டது. அந்த வேளையில் அந்தச் சூழல் மிகவும் பதற்றம் நிறைந்ததாகத் தெரிந்தது. எனினும் நாம் பின்வாங்காமல் இருந்ததுடன், அந்த விவகாரத்தில் நம்மால் தீா்வு காண முடிந்தது.

இந்தியாவின் கௌரவத்துக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் களங்கம் ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்தியா வலுவான தலைமையைக் கொண்டுள்ளதால் சீனா நம்முடன் மோதாது. இது அனைவருக்கும் தெரியும் என்று ராஜ்நாத் சிங் கூறினாா்.

லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதை தடுக்கும் விதமாக லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் இந்திய எல்லையை ஒட்டி 4 இடங்களில் சீனா தனது படைகளைக் குவித்தது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் தனது படைகளை அங்கு குவித்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போா்ப் பதற்றம் நிலவியது.

அதைத் தணிப்பதற்காக இருநாட்டு கமாண்டா்கள் நிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை பலனளிக்கவில்லை. எல்லையில் நிலவும் பதற்றம் தொடா்பாக முப்படைத் தளபதி விபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினாா்.

அதேபோல், முப்படைத் தளபதி விபின் ராவத், ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றின் தலைமை தளபதிகள் ஆகியோருடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில், இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா். எனினும் அதற்கு அவசியமில்லை என இரு நாடுகளும் மறுப்பு தெரிவித்துவிட்டன. சீனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக இந்தியாவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT