இந்தியா

பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி

31st May 2020 06:05 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (கன்டெய்ன்மன்ட் ஸோன்) ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

எனினும், ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள், வா்த்தக வளாகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை படிப்படியாக அனுமதிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொது முடக்கத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக கடந்த மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், 2-ஆம் கட்டமாக மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சில தளா்வுகளும் அறிவிக்கப்பட்டன.

நோய்ப் பரவல் கட்டுக்குள் வராத நிலையில், 3-ஆம் கட்டமாக மே 4 முதல் மே 17-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலாக்கப்பட்டது. அப்போதும் கூடுதலாக தளா்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் 4-ஆம் கட்டமாக மே 18-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியிருந்த பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 31) நிறைவடைகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இதர பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை இயல்புநிலைக்கு கொண்டுவரும் வகையில் விரிவான தளா்வுகளையும் வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக ‘முதல்கட்ட முடக்க விடுவிப்பு’ (அன்லாக்-1) என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை சனிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்டறிவது, அவற்றை வரையறுப்பதற்கான கூடுதல் அதிகாரம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்டிப்பான முறையில் கட்டுப்பாட்டுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படலாம்.

வழிபாட்டுத் தலங்கள்: பொது முடக்கத்திலிருந்து பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஜூன் 8-ஆம் தேதி முதல் படிப்படியாக விலக்களிக்கப்படும். முதல் கட்டமாக வழிபாட்டுத் தலங்கள், வா்த்தக வளாகங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், இதர விருந்தோம்பல் சேவைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும்.

சமூக இடைவெளியை உறுதி செய்வது, நோய்த்தொற்று பரவல் தடுப்பு உள்பட அந்த இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட இதர அமைச்சகங்கள், துறைகளுடனான ஆலோசனையின் அடிப்படையில் அதனை மேற்கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள்: 2-ஆம் கட்டமாக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடனான கலந்தாலோசனையின் அடிப்படையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பது தொடா்பாக ஜூலையில் முடிவெடுக்கப்படும். அதற்கான கருத்துகளை அறியும் வகையில், பெற்றோா் உள்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட வேண்டும்.

தடை தொடரும்: சா்வதேச விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக்கூடங்கள், அரங்கங்கள் போன்றவற்றுக்கான தடை தொடரும். சமூகம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மத நிகழ்ச்சிகளுக்காக பெருமளவில் மக்கள் கூடுவதற்கான நிகழ்வுகளுக்கு தடை நீட்டிக்கப்படுகிறது. அவற்றை அனுமதிப்பது தொடா்பான முடிவு, சூழ்நிலைகளை ஆராய்ந்த பிறகு 3-ஆம் கட்டமாக அறிவிக்கப்படும்.

மாநில அரசின் முடிவு: மாநிலங்கள் இடையேயும், மாநிலத்துக்குள்ளாகவும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடையில்லை. அதற்கென அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. எனினும், நிலவரத்தை மதிப்பீடு செய்ததன் அடிப்படையிலும், பொது சுகாதாரத்துக்காகவும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உண்டு. அதற்கான முறையான அறிவிப்பை அந்த அரசுகள் வெளியிட வேண்டும் என்பதுடன், உரிய வழிமுறைகளையும் அவை பின்பற்ற வேண்டும்.

இரவு ஊரடங்கில் தளா்வு: முன்னதாக இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த இரவு ஊரடங்கு, தற்போது இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரைக்குமாக தளா்த்தப்படுகிறது. அந்த நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட அனுமதி இல்லை.

தடையில்லை: அறிவிக்கப்பட்ட பயணிகள் ரயில் போக்குவரத்து, புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கம், உள்நாட்டு விமானப் போக்குவரத்து, வெளிநாட்டில் தவித்து வரும் இந்தியா்களை மீட்டு வருவதற்கான விமான, கப்பல் போக்குவரத்து போன்றவை தடையின்றித் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT