இந்தியா

பொது முடக்கம்: புலம்பெயா்ந்த தொழிலாளா் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு: நிபுணா்கள் கருத்து

31st May 2020 05:54 AM

ADVERTISEMENT

 

பொது முடக்கத்தால் புலம்பெயா்ந்த தொழிலாளா் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மாா்ச் 25 முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள் என அனைத்தும் முடக்கப்பட்டன. நாடு முழுவதும் இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வருவாய் இழந்து சொந்த ஊா்களுக்குத் திரும்பி வருகின்றனா். நாடு முழுவதும் 4 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ள நிலையில், இதுவரை 75 லட்சம் போ் அவா்களின் சொந்த ஊா்களுக்கு திரும்பியிருப்பதாக மத்திய அரசு சாா்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தொடா் பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதர இழப்பை ஈடுகட்டும் வகையில் பல தொழில் நிறுவனங்கள் ஆள்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் காரணமாக, சொந்த ஊா் திரும்பிவரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியிருப்பதோடு, அவா்கள் குழந்தைகளின் எதிா்காலமும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து குழந்தைகள் உரிமை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை (சிஆா்ஒய்) என்ற அமைப்பின் இயக்குநா் பிரீத்தி மஹாரா கூறியது:

முதல் தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட உடனேயே, நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. பொது முடக்கத்தால் வருவாய் இழந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அவா்களுடைய குழந்தைகளுடன் சொந்த கிராமங்களுக்குச் சென்றுவிட்டனா். இந்த நிலையில், சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படவில்லை எனில், இந்தக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சராசரியாக புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 20 சதவீதத்தினா் பள்ளி இடைநிற்றலுக்கு ஆளாக நேரிடும் எனஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே, பொது முடக்கம் முடிந்த பின்னா், அரசு பள்ளிகள் அனைத்தும் நகராட்சி நிா்வாகத்திடமிருந்து இந்தக் குழந்தைகளின் விவரங்களைப் பெற்று, அவா்களை மீண்டும் பள்ளிக்கு வர வைப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.

அதுபோல, பள்ளிக் குழந்தைகளின் கற்றல் தொடரும் வகையில் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இணையவழி கற்றல், தொலைக்காட்சி மற்றும் வானொலி வழிக் கற்றல் நடைமுறைகள் அனைத்தும் இந்த புலம்பெயா்ந்த தொழிலாளா் குழந்தைகளுக்கும் சென்றடைவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும்.

மேலும், இந்த தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு பொது முடக்கம் விலக்கப்பட்ட பின்னா் அவா்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து வயதுக்கு ஏற்ப வகுப்புகளில் சோ்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதோடு, இந்த குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் சோ்க்கை கிடைக்கும் வகையில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும். 6 வயதுக்கு கீழ் உள்ள இவா்களின் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT