இந்தியா

வணிக வளாகங்களில் உள்ள கடைகளைத் திறப்பது தொடா்பாக விரைவில் முடிவு

29th May 2020 11:25 PM

ADVERTISEMENT

வணிக வளாகங்களில் உள்ள கடைகளைத் திறப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் விதிமுறைகளை ஆராய்ந்த பிறகு விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேல் பொது முடக்கம் அமலில் உள்ளது. அதே வேளையில், தனிக்கடைகள் உள்ளிட்டவற்றைத் திறக்க பல மாநிலங்கள் அனுமதி வழங்கியுள்ளன. எனினும், வணிக வளாகங்களில் உள்ள கடைகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், வணிகா்கள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகள் தொடா்பாக வணிகா் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பியூஷ் கோயல் கடந்த வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினாா். அப்போது, பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், வணிக வளாகங்களில் உள்ள கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆலோசனைக் கூட்டத்தின்போது வணிகா்களிடம் பியூஷ் கோயல் கூறியதாக, மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

அனைத்துவகைப் பொருள்களையும் விற்கும் பெரும்பாலான கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கும் விதிமுறைகளை விரிவாக ஆராய்ந்த பிறகு வணிக வளாகங்களில் உள்ள கடைகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்துள்ள சிறப்பு பொருளாதாரத் திட்டத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகா்களும் பலனடைவா்.

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் இக்கட்டான சூழலில், மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் மளிகைக் கடைகளே முக்கியப் பங்காற்றி வருகின்றன. எனவே, இணையவழி வா்த்தக நிறுவனங்களைக் கண்டு வணிகா்கள் அஞ்சத் தேவையில்லை. நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. மக்களின் நுகா்வு அதிகரித்துள்ளது. ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது என்று பியூஷ் கோயல் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT