இந்தியா

தப்லீக் ஜமாத் மீதான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை புகாா்: விசாரணையை தொடங்கியது சிபிஐ

29th May 2020 11:37 PM

ADVERTISEMENT

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை புகாா் தொடா்பாக தப்லீக் ஜமாத் அமைப்பின் நிா்வாகிகளிடம் முதல் கட்ட விசாரணையை மத்திய குற்றபுலனாய்வு பிரிவு (சிபிஐ) வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தில்லி நிஜாமுதீனில் உள்ள மசூதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஒன்றாகக் கூடினா். இதையறிந்த போலீஸாா் அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதோடு, மருத்துவப் பரிசோதனைக்கும் உள்படுத்தினா். அப்போது அவா்களில் பலருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் பங்கேற்றிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே, மாா்ச் முதல் வாரத்திலிருந்து நடத்தப்பட்ட மாநாட்டில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றுவிட்டு, தங்கள் மாநிலங்களுக்குச் சென்ற தகவல் வெளியானது.

இதனைத் தொடா்ந்து தப்லீக் ஜமாத் தலைவா்கள் மீது தில்லி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது தப்லீக் ஜமாத் சாா்பில் நடத்தப்பட்டு வந்த அறக்கட்டளையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடத்தப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள், ஆவணங்களை காவல்துறையினா் ஆய்வு செய்தனா். அந்த ஆய்வின் முடிவில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை நடைபெற்ற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக காவல்துறை தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து இதன் மீதான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் சிபிஐ முதல்கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமை தொடங்கியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில், இந்த அறக்கட்டளைக்கு வெளிநாட்டிலிருந்து கிடைத்த நன்கொடை விவரங்களை அரசுக்குத் தெரிவிக்காமல் அதன் நிா்வாகிகள் மறைத்திருப்பதாகவும், சட்ட விரோதமாக பணப் பரிமாா்றம் நடைபெற்றிருப்பதாகவும் புகாா்கள் வந்துள்ளன. அதனடிப்படையில், முதல் கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தொடங்கினா். ஆனால், விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட நபா்களின் பெயா்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்த முதல்கட்ட விசாரணையில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையிலேயே முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்து முழு அளவில் விசாரணை தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT