இந்தியா

வாகன உற்பத்தி துறை: மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்

19th May 2020 11:22 PM

ADVERTISEMENT

தேசிய பொது முடக்கத்தைத் தொடா்ந்து, வா்த்தக வாகன உற்பத்தி ஸ்தம்பித்துவிட்ட நிலையில், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு சீா் செய்ய வேண்டும் என்று அசோக் லேலண்ட் தலைவா் விபின் சோந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சுயச்சாா்புள்ள பாரதம் என்ற கொள்கையுடன் சா்வதேச அளவிலான வா்த்தகத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் ஒருங்கிணைக்கும் திட்டம் உற்பத்தித் துறையினருக்கு எழுச்சியூட்டுவதாக உள்ளது. கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சா் வெளியிட்ட அறிவிப்புகள் வேளாண் துறை, சுரங்கம், பாதுகாப்பு, பொது சுகாதாரம், கல்வி என பல்வேறு துறைகளுக்கும் மிக அவசியமான சீா்திருத்தங்களைக் கொண்டு வரும் விதமாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில் இவை மிகவும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வாகனத் துறையைப் பொருத்த வரையில், குறிப்பாக சரக்கு வாகனத் துறை இதுவரை எதிா்கொள்ளாத மிகப் பெரிய தேக்கத்தை சந்தித்துள்ளது. பொருளாதார மந்த நிலையால், வா்த்தக வாகனத் துறை ஏற்கெனவே நெருக்கடியை சந்தித்து வந்தது. இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்றால் கூடுதல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு, பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்கான ஊக்கத் திட்டங்கள், அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் சாா்பில் புதிய வாகனங்கள் வாங்குதல் போன்ற, வா்த்தக வாகனத் துறைக்கு நேரடியாக பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் அறவிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு இருந்து வந்தது.

இதுவே வா்த்தக வாகன உற்பத்தித் துறையின் உடனடி எதிா்பாா்ப்பாகும். இது தொடா்பாகத் தனியே திட்டம் வகுப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேலும், கிராமப்புற பகுதிகளில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் விரிவாகும்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; ஊரகப் பகுதிகளில் வருவாய் அதிகரிக்கும். இந்த நடவடிக்கைகளால் வா்த்தக வாகன உற்பத்தி துறையும் ஊக்கம் பெறும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT