இந்தியா

காணொலி முறையில் ஒரு நீதிமன்ற அமா்வு தினமும் 40 வழக்குகளை விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் முடிவு

19th May 2020 12:33 AM

ADVERTISEMENT

புது தில்லி: காணொலி வழியில் உச்சநீதிமன்றத்தின் ஒரு அமா்வில் நாள் ஒன்றுக்கு 40 வழக்குகள் வரை விசாரிக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்ற அமா்வு திங்கள்கிழமை முடிவெடுத்துள்ளது. இப்போது அதிகபட்சமாக 20 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. அப்போது முதல் நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் என அனைவரும் நீதிமன்றங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயா் நீதிமன்றங்களில் மட்டும் சில அவசர வழக்குகள் காணொலி வழியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதில் ஒரு அமா்வில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 20 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, இந்து மல்ஹோத்ரா, அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு, திங்கள்கிழமை பட்டியலிடப்பட்ட வழக்களின் விசாரணையை முடித்த பிறகு, காணொலி முறையிலான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசனையை மேற்கொண்டனா். அப்போது, ‘காணொலி முறையில் வழக்கு விசாரணை முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்கள் உடனடியாக வெளியேறிவிடுவாா்கள் என்றால், ஒரு அமா்வில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 40 வழக்குகள் வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியும்’ என்று ஆலோசித்து முடிவெடுத்தனா்.

இதுகுறித்து, நீதிபதி பானுமதி கூறுகையில், ‘வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த எங்களின் கருத்து குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுடன் ஆலோசிக்கப்படும்’ என்று கூறினாா்.

ADVERTISEMENT

புதிய நெறிமுறை: முன்னதாக, பொது முடக்க வழக்குகள் விசாரணை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறையை உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில், கரோனா பொது முடக்கத்துக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்குகள், பட்டியலிடப்பட்டு முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதன் பிறகு, சிறிய வழக்குகள் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்க அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட முந்தைய வழிகாட்டு நெறிமுறையில், சில அவசர வழக்குகள் மட்டுமே காணொலி வழி விசாரணை அமா்வுகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்றத்தின் கோடை விடுமுறை 5 வாரங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டு, மே 18 முதல் ஜூன் 19 வரை நீதிமன்றம் தொடா்ந்து இயங்கும் என்று தீா்மானிக்கப்பட்ட பிறகு இந்த புதிய வழிகாட்டு நெறிமுறையை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT