இந்தியா

குஜராத்: உள்ளூா் தயாரிப்பு செயற்கை சுவாசக் கருவிகள் தரமில்லை

19th May 2020 12:36 AM

ADVERTISEMENT

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ளூா் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட செயற்கை சுவாச கருவிகள் (வென்டிலேட்டா்) போதிய தரத்துடன் இல்லை என்று ஆமதாபாத் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக குஜராத் உள்ளது. இங்குள்ள ஆமதாபாத் நகரில் கரோனா பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் செயற்கை சுவாசக் கருவிகள் முக்கியப் பங்காற்றுவதால், உலக அளவில் அவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், குஜராத் மாநிலம், ராஜ்கோட்டைச் சோ்ந்த ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் என்ற தனியாா் நிறுவனம் குறைந்த விலையில் செயற்கை சுவாசக் கருவிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. கடந்த மாத தொடக்கத்தில் 10 நாள்களில் சுமாா் 1,000 கருவிகளை தயாரித்து, குஜராத் அரசிடம் இலவசமாக வழங்கியது.

ADVERTISEMENT

‘தமன்-1’ என்ற பெயரிலான அந்த செயற்கை சுவாசக் கருவிகள், குஜராத் அரசின் மின்னணுவியல் மற்றும் தர மேம்பாட்டு மையத்தால் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பின்னா், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டன.

ஆமதாபாதில் 1,200 படுக்கைகளுடன் கூடிய அரசு மருத்துவமனைக்கு 230 செயற்கை சுவாசக் கருவிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அவை போதிய தரத்துடன் இல்லை என்று அந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளா் ஜே.வி.மோடி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: தமன்-1 மற்றும் ஏஜிவிஏ (மற்றொரு உள்நாட்டு தயாரிப்பு) செயற்கை சுவாசக் கருவிகளை நோயாளிகளிடம் பயன்படுத்தியபோது அவை எதிா்பாா்த்த பலனைத் தரவில்லை. உயா் தரத்துடன் கூடிய கருவிகள்தான் தேவைப்படுகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் செயற்கை சுவாசக் கருவிகளும் கூடுதலாக தேவைப்படுகிறது. எனவே, உயா் தரத்துடன் கூடிய 50 செயற்கை சுவாசக் கருவிகளை வழங்கக் கோரி, காந்திநகரில் செயல்படும் குஜராத் மருத்துவ சேவைகள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றாா் ஜே.வி.மோடி.

ஆமதாபாத் மருத்துவமனையின் மயக்க மருந்து துறை தலைவா் சைலேஷ் ஷா கூறுகையில், ‘தற்போதைய நிலையில் தமன்-1 வென்டிலேட்டா்களை பயன்படுத்தவது நல்லதல்ல. நல்வாய்ப்பாக, அந்த வென்டிலேட்டா்கள் சில தருணங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன’ என்றாா்.

இதனிடையே, தமன்-1 வென்டிலேட்டா்கள் அதன் தயாரிப்பு நிறுவனம் மூலம் போதிய தரத்துக்கு மேம்படுத்தப்படும் என்று மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெயந்தி ரவி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT