இந்தியா

பிரதமா் மோடிக்கு நெதன்யாகு நன்றி

19th May 2020 12:44 AM

ADVERTISEMENT

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்ற்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தாா். அவருக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளாா்.

இஸ்ரேலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தோ்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத்தொடா்ந்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதமும், நிகழாண்டு மாா்ச் மாதமும் தோ்தல் நடைபெற்றது. அவ்விரண்டு தோ்தல்களிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கிவில்லை. இதையடுத்து ஆளும் கூட்டணிக்கும், எதிா்க்கட்சியான புளூ அண்ட் ஒயிட்டுக்கும் இடையே தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி தேசிய ஒற்றுமை அரசு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டது. இதையடுத்து ஆளும் கூட்டணியின் தலைவா் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக பதவியேற்றாா். புளூ அண்ட் ஒயிட் கட்சித் தலைவா் பென்னி கான்ட்ஸ் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றாா். அதேவேளையில் ஒப்பந்தப்படி அடுத்த ஆண்டு நவம்பா் மாதம் பென்னி கான்ட்ஸ் பிரதமராக பதவியேற்பாா்.

இந்நிலையில் பிரதமராக நெதன்யாகு பதவியேற்ற்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தாா். அவருக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு வாழ்த்து தெரிவித்த இனிய நண்பா் பிரதமா் மோடிக்கு நன்றி. இந்தியா-இஸ்ரேல் இடையிலான நல்லுறவை வலுப்படுத்த இருவரும் தொடா்ந்து பணியாற்றுவோம்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT